உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்

ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்

திருப்பூர்: கடந்த நிதியாண்டில், 44 ஆயிரத்து, 747 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நிகழ்த்தி சாதித்துள்ள திருப்பூர் 'கிளஸ்டர்', இந்த நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கு நோக்கி பயணிக்கிறது.சலுகைகள் கைகூடாத நிலையிலும், சர்வதேச சங்கடங்களையும் எதிர்கொண்டு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், கடந்த நிதியாண்டில், ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதித்துக்காட்டியுள்ளனர். நெடுநாள் கனவான 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள, ஏற்றுமதி புள்ளிவிவர அடிப்படையிலான அறிக்கை, இந்த சாதனையை உறுதி செய்துள்ளது.

திருப்பூர் பங்களிப்பு உயர்வு

நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 55 சதவீதமாக இருந்து வந்த, திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த நிதியாண்டில், 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பின்னலாடை உற்பத்தி கேந்திரம் என்ற அந்தஸ்தை திருப்பூர் மீண்டும் மெருகேற்றியுள்ளது.இந்திய பின்னலாடை ஏற்றுமதி, 2021-22ல், 60 ஆயிரத்து, 950 கோடி ரூபாயாக இருந்தது; அடுத்த ஆண்டில், 61 ஆயிரத்து 807 கோடியாக உயர்ந்தது. கடுமையான நெருக்கடியில் சிக்கித்தவித்த 2023-24ல், வழக்கமான வாய்ப்புகளை தக்கவைக்கவே போராட வேண்டியிருந்தது; அந்தாண்டு, 55 ஆயிரத்து, 798 கோடி ரூபாயாக ஏற்றுமதி வர்த்தகம் இருந்தது. கடந்த நிதியாண்டில் (2024-25), 65 ஆயிரத்து, 178 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த, 2021-22ல், 35 ஆயிரத்து, 834 கோடி ரூபாய், 2022 -23ல், 36 ஆயிரத்து, 418 கோடி, 2023-24ல் 33 ஆயிரத்து, 45 கோடி என இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியது (39,618 கோடி).திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லையில் இயங்கும் நிறுவனங்களின் ஏற்றுமதியை மதிப்பிடும்போது, திருப்பூர் 'கிளஸ்டர்'-ன் பின்னலாடை ஏற்றுமதி, 44 ஆயிரத்து, 747 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் கைகொடுக்கும்

போட்டி வர்த்தகத்தில் எப்போதும் இளைப்பாறுதலே கிடையாது. திருப்புமுனையாக, எட்டாண்டு கால முயற்சியால், பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விரைவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவம் பெறும்போது, திருப்பூருக்கான வர்த்தக வாய்ப்பு பிரகாசமாக மாறும். எனவே, வர்த்தகத்தை மென்மேலும் விரிவாக்கம் செய்யவே, திருப்பூரின் ஒவ்வொரு நிறுவனங்களும் களமிறங்கப்போகின்றன.

இலக்கு நிர்ணயம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் சாதனை படைத்த திருப்பூர், சோதனைகளை வென்று, அபாரமான வெற்றியை ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னோடி 'கிளஸ்டர்' என்ற பெருமையை பெற்றுள்ளது.நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த, 40 ஆயிரம் கோடி என்பது, 44 ஆயிரத்து, 747 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வெற்றிப்பயணம் வேகம் குறையாமல் தொடரும்; நடப்பு நிதியாண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையை திருப்பூர் எட்டிப்பிடிக்கும். பிரிட்டனுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அதற்கு பெரிதும் கைகொடுக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ