சுல்தான்பேட்டையில் போலி மருத்துவர்கள்; சுளுக்கெடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பல்லடம் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில், போலி மருத்துவர்கள் களையெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பல்லடம் அருகே சுல்தான்பேட்டை வட்டாரப் பகுதியில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தென்னை விவசாயம், கறிக்கோழி பண்ணைகள் மற்றும் கால்நடை விவசாயம் இப்பகுதியில் பரவலாக நடந்து வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது மருத்துவ மேல் சிகிச்சைகளுக்காக, அருகிலுள்ள கோவை, பொள்ளாச்சி அல்லது உடுமலை உள்ளிட்ட பகுதி களுக்கு செல்கின்றனர்.காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி உள்ளிட்ட சாதாரண உபாதைகளுக்கு, உள்ளூரில் செயல்படும் கிளினிக்குகள், மருத்துவமனைகளை நாடுகின்றனர். இவற்றில், சில போலி மருத்துவர்களும் உலா வருவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.பொதுமக்கள் சிலர் கூறியதாவது:கடந்த, 3 நாள் முன், செஞ்சேரிமலையைச் சேர்ந்த பிரபு, 21 என்பவர், இங்குள்ள கிளீனிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற பின், மயக்கம் அடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு முன்னதாகவே உயிரிழந்தார்.இது தொடர்பாக, சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தனியார் கிளீனிக்குகள், மருந்தகங்களும் அதிகரித்து வருகின் றன. இதில், சில போலி மருத்துவர்களும் இருப்பதாக சந்தேகம் உள்ளது.எனவே, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், சுல்தான்பேட்டை பகுதி யில் முகாமிட்டு, போலி மருத்துவர்கள், மருந்தகங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.