பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவது இல்லையாம் ; அதிகாரி பதிலால் விவசாயிகள் கடும் அதிருப்தி
திருப்பூர்; பி.ஏ.பி., கிளைக்கால்வாயில் நீர் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுக்கு, துறை ரீதியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசனத்தில் பொங்கலுார் உட்கோட்ட பகுதிகளில், மூன்றாம் மண்டலத்தில் அதிகளவு நீர் எடுக்கப்படுகிறது; வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய்க்கு சமமாக நீர் பங்கீடு வழங்குவது இல்லை; நீர் திருட்டு அதிகளவில் நடக்கிறது; மண்டலம் அல்லாத கால்வாயில் நீர் எடுக்கப்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.இதற்கு, நீர்வளத்துறையின் ஆழியாறு வடிநில உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் அனுப்பியுள்ள விளக்கம்:பொங்கலுார் உட்கோட்ட பகுதிகளில், மூன்றாம் மண்டல பாசன கால்வாய் தவிர, மூன்று மண்டல கால்வாய்களில், மதகுக்கு முன்பும் மற்றும் ஷட்டர்க்கு உள்ளேயும், சிமென்ட் கருங்கல் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால், பாசனமற்ற மண்டலங்களுக்கு நீர் திறக்க முடியாது.மேலும், மூன்றாம் மண்டல பாசனத்தில்,ஒரு ஷிப்டுக்கு, சில கால்வாய்களுக்கு, 7 நாள் திறப்பு என்ற அடிப்படையில், 60 டியூட்டி; சில கால்வாய்களுக்கு, 15 நாள் திறப்பு என்ற அடிப்படையில், 120 டியூட்டி என்ற கணக்கீடு அடிப்படையில் பாசன நீர் திறந்து விடப்படும்.வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு, மொத்தம், 15 நாட்களுக்கு, 12 டியூட்டி என்ற அடிப்படையில், 12 ஆயிரம் ஏக்கருக்கு, வினாடிக்கு, 100 கன அடி என்ற அளவில் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், வாய்க்காலின் துாரம், நீர் கசிவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நீர் இழப்புக்காக, 31 கன அடி கூடுதலாக சேர்த்து, வினாடிக்கு, 131 கன அடி நீர்; வாய்க்காலில் முழு கொள்ளளவான, 450 அடி என்ற அளவில் ஒரு ஷிப்டுக்கு, 4,000 ஏக்கருக்கு, 5 நாட்கள் வீதம், 3 ஷிப்டுகளுக்கு, 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.பாசன திட்டத்தில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பதை கட்டுப்படுத்த, அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கூட்டு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இக்குழுவில், தங்களையும் இணைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கண்காணிப்புக் குழுவில் அந்தந்த பகிர்மான குழுவின் எல்லைக்குட்பட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே, பொங்கலுார் உட்கோட்ட எல்லையில், எவ்வித நீர் திருட்டும், எவ்வித கூடுதல் நீரும் எடுக்கப்படுவதில்லை. இந்த கோட்டத்திற்கு வரும் நீரை, சமமாக பங்கீடு செய்து, காங்கயம் உட்கோட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய, வினாடிக்கு, 131 கன அடி நீர் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தெளிவில்லாத விளக்கம்பி.ஏ.பி., கிளை கால்வாய் நீர் பாதுகாப்புசங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ''உதவி நிர்வாக பொறியாளரின் விளக்கத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அளவு, பாசனம் பெறும்பகுதி மற்றும் காலக்கெடு உள்ளிட்ட தெளிவான வினியோக அட்டவணை இல்லை. நீர் அளவீடுகள், 30 ஆண்டு பழமையான தரவுகளை அடிப்படையாக கொண்டவை என்பதும் ஏற்புடையதல்ல. உண்மையை மூடி மறைக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றத்தை நாட வேண்டி யிருக்கும்,'' என்றார்.