நமக்கு நாமே தற்காப்புக்கு களமிறங்க விவசாயிகள் முடிவு
திருப்பூர்; கடந்தாண்டு, பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில், தோட்டத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக, நான்கு பேரும், பொங்கலுார் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த நவ., மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகொலை செய்யப்பட்டனர்.இதனால், தோட்டத்து பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, தமிழக விவசாயிள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகர செயலாளர் ரமேஷ் கூறியதாவது:விவசாயிகளின் பணம், நகை, ஆடு, மாடுகள், மின் ஒயர், மோட்டார் உள்ளிட்டவற்றை குறி வைத்து, தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடந்துக் கொண்டிருக்கிறது. போலீசார், திருடர்களை பிடித்து தண்டித்தாலும், திருட்டு குறையவே இல்லை. பல நேரங்களில், திருட்டை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள், படுகொலை செய்யப்படுகின்றனர்.விவசாய விளை நிலங்களில், யார் வேண்டுமானாலும் மது அருந்துவது, காலி பாட்டில்களை உடைப்பது, தட்டி கேட்கும் விவசாயிகளை வெட்டுவது போன்ற சூழல் நிலவுகிறது. திருப்பூர் மாவட்டம் கள்ளக்கிணற்றில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட நான்கு விவசாயிகள், கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்டனர்.கடந்த மாதம், சேமலைக்கவுண்டன் பாளையத்தில் இரவில், 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். விவசாயிகள், தங்கள் தோட்டம், மகசூல், கால்நடைகளை பாதுகாக்க விவசாய நிலத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. திருடர்கள், தாக்குதலில் பயிற்சி பெற்றவர்களாகவும், பயங்கர ஆயுதங்களுடன் வருகின்றனர். ஆனால், விவசாயிகள் நிராயுதபாணிகளாக நிற்க வேண்டி உள்ளது.எனவே, தற்காப்புக்காக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு பாரம்பரிய தற்காப்பு கலைகள் சிலவற்றை கற்றுத்தர முடிவு செய்துள்ளோம். இதுதவிர, தோட்ட வீடுகளில் அலாரம் பொருத்துவது, சிசிடிவி., கேமரா பொருத்துவது, வீட்டுக்குள் தற்காப்பு ஆயுதங்களை வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.இதுதொடர்பாக, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வரும், 29ம் தேதி, காலை, 10:00 மணிக்கு பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபம் முதல், கலெக்டர் அலுவலகம் வரை தற்காப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.