உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பப்பாளி சாகுபடிக்கு தொழில்நுட்பங்கள் ஆர்வத்துடன் பின்பற்றும் விவசாயிகள்

பப்பாளி சாகுபடிக்கு தொழில்நுட்பங்கள் ஆர்வத்துடன் பின்பற்றும் விவசாயிகள்

உடுமலை ; குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, பப்பாளி சாகுபடி மேற்கொள்ள, 'மல்ஷீங் ஷீட்' தொழில்நுட்பத்தை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.உடுமலை பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இதில், நிலத்தடி நீர் மட்டம், குறைவாக உள்ள பகுதிகளில், அதற்கேற்ப, சாகுபடிகளை விவசாயிகள் தேர்வு செய்கின்றனர்.அவ்வகையில், பரவலாக விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதில், பழங்கள் தேவைக்காக அதிகளவு பப்பாளி சாகுபடி செய்கின்றனர். காய்களில் இருந்து பால் எடுத்து விற்பனை செய்யவும், குறிப்பிட்ட சில ரகங்கள் உள்ளது.பப்பாளி பாலில் இருந்து பெறப்படும் 'பப்பெயின்', அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.எனவே, பப்பாளி பால் உற்பத்திக்காக, பிரத்யேக ரக நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.இந்நிலையில், தற்போது, பப்பாளி சாகுபடியில், நீர் சிக்கனத்தை பின்பற்ற, 'மல்ஷிங் ஷீட்', தொழில்நுட்பத்தை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.விளைநிலங்களில், மேட்டுப்பாத்தி அமைத்து, அதன் மேல் ஷீட் பரப்பி விடப்படுகிறது. அதில், நாற்று நடவுக்கு தேவையான இடைவெளி விடப்பட்டிருக்கும்.அவ்விடத்தில், சொட்டு நீர் வாயிலாக தண்ணீர் பாய்ச்சலாம். இம்முறையால், பப்பாளி நாற்றுகளுக்கு அருகிலேயே நீர்ப்பாசனம் செய்யலாம்; தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது. கோடை காலத்தில், பப்பாளி நாற்றுகளின் அருகில், ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும்.விவசாயிகள் கூறுகையில், 'குறைந்த தண்ணீரை கொண்டு பப்பாளி சாகுபடி மேற்கொள்ளலாம். ஆனால், விற்பனை வாய்ப்புகள் குறித்து போதிய அனுபவம் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில், வேளாண் விற்பனை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை