தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்
உடுமலை: வரப்புகளில் வேலிப்பயிராக பராமரிக்கும் ஆமணக்கு செடிகளை, தனிச்சாகுபடியாக மேற்கொள்ள உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்து பயிராக ஆமணக்கு இருந்தாலும், முக்கிய சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, வரப்பு பயிராகவே உடுமலை பகுதி விவசாயிகள் பராமரித்து வந்தனர். வரப்புகளில் ஆமணக்கு செடிகளை வளர்ப்பதால், தக்காளி உட்பட காய்கறி பயிர்களை தாக்க வரும், பூச்சிகள், ஆமணக்கு இலைகளால் ஈர்க்கப்படும்; அந்த இலைகளை பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துவதால், பிரதான பயிர் பாதுகாக்கப்படும். இந்நிலையில், பல்வேறு பயன்பாடுகளுக்காக ஆமணக்கு விதைகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தேனி உட்பட மாவட்டங்களை போல, உடுமலை பகுதியிலும் விவசாயிகள் ஆமணக்கை தனிப்பயிராக சாகுபடி செய்யத்துவங்கியுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: ஆமணக்கு சாகுபடிக்கு, குறுகிய கால வீரிய ஓட்டு ரக விதைகளை பயன்படுத்தியுள்ளோம். இந்த ரகத்தில், குறுகிய கால இடைவெளியில் செடிகளில், அதிக குலைகள் பிடிக்கும். மேலும், இலைப்புழுக்கள், சாறு உறிஞ்சம் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்கள் செடிகளை தாக்குகிறது. ஏக்கருக்கு, 1,500 கிலோ விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.