மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
திருப்பூர்: தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், திருப்பூர் சுற்றுப்பகுதி விவசாயிகள், மானாவாரி பயிர் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், இயல்பான அளவை காட்டிலும், மழை அதிகம் பெய்துள்ளது. குளிர் பருவத்தில் பெய்த மழையால், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தீவனம் தடையின்றி கிடைத்தது. கோடை வெயிலை தணிக்கும் வகையில், கோடை மழையும் சீராக பெய்துள்ளது. வாராந்திர இடைவெளியில், கனமழை பெய்துள்ளதால், நிலத்தடி நீர் சரிவு தடுக்கப்பட்டுள்ளது.அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், குளம் குட்டைகளில் ஏற்கனவே தண்ணீர் நிரம்பியுள்ளது. கோடை மழையும் சரியான இடைவெளியில் பெய்ததால், செடி, கொடிகள் தழைத்து, கால்நடைகளுக்கு தீவனம் தடையின்றி கிடைத்து வந்தது. அதிக மழை பெய்ததால், தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படவில்லை.தென்மேற்கு பருவமழை துவங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில், நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவத்தில் இயல்பான மழை பெய்தாலும் போதும் என்ற மனநிலையில் மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் களமிறங்கிவிட்டனர். சோளம், தட்டை பயறு, பச்சைப்பயறு, கொள்ளு, நரிப்பயிர் போன்ற தானிய பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.