நீர்மட்டம் உயர்வால் நம்பிக்கை விவசாயிகள் பணிகள் தீவிரம்
உடுமலை: வடகிழக்கு பருவமழை மற்றும் பாசன திட்டங்களுக்கு தண்ணீர் திறப்பால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இந்தாண்டு, நீண்ட கால மற்றும் நிலைப்பயிர்கள் சாகுபடி செழிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதியில், நீண்ட கால பயிராக தென்னையும், சீசன் அடிப்படையில், தானியங்கள், காய்கறி சாகுபடியும், பல லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடிகள் அனைத்துக்கும் நிலத்தடி நீர்மட்டமும், அதற்கான பருவமழையும் ஆதாரமாக அமைந்துள்ளன. கடந்த சீசனில், வட கிழக்கு பருவமழை நன்றாக பெய்து, பெரும்பாலான மழை நீர் ஓடைகளில் நீரோட்டம் இருந்தது. அதே போல், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் நான்காம் மண்டல பாசனத்துக்கு 5 சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது. பருவமழையோடு, பாசனத்துக்கான தண்ணீர் திறப்பும், நிலத்தடி நீர்மட்டம் உயர கைகொடுத்தது. பல்வேறு கிராமங்களில், குளங்கள், பாசன நீரால் நிரம்பியுள்ளன. சாகுபடிக்கு நம்பிக்கை கொடுத்த பருவமழையால், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால், தென்னை சாகுபடியில், தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்தது. பருவ மழைக்கு பிறகு, குறைந்த உற்பத்தியை மீண்டும் எட்ட தென்னை விவசாயிகள் பணிகளை துவக்கியுள்ளனர். அதன்படி, தண்ணீர் பாய்ச்சும் வட்டப்பாத்திகளை சீரமைத்து, தொழு உரம், ரசாயன உரமிடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தற்போது கொப்பரை விலை நிலையில்லாமல் இருந்தாலும், விரைவில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே உள்ளது. இதே போல், மானா வாரியாக, மக்காச்சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை, சோ ளம் உட்பட சாகுபடிகளும் இம்முறை கைவிடாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.