உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரைபுரள்கிறது நொய்யலில் வெள்ளமும், மக்களிடம் உற்சாகமும்

கரைபுரள்கிறது நொய்யலில் வெள்ளமும், மக்களிடம் உற்சாகமும்

திருப்பூர் : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கிய நிலையில், திருப்பூரில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொதுமக்களை மகிழ்வடையச் செய்துள்ளது.கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை கடந்து, கரூர் மாவட்டத்தில், 20 கி.மீ., துாரம் பாய்ந்து, முடிவில் காவிரியில் கலக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் துவங்கும் நொய்யல் ஆற்றின் பயணம், 180 கி.மீ., துாரம் பயணிக்கிறது.கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நொய்யல் கரையோரம் விவசாய நிலங்களும் உள்ளன; மழையின் போது, நொய்யலில் பெருக்கெடுக்கும் நீர், விவசாய நிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், கோவை, திருப்பூரில் ஆற்றங்கரையோரமுள்ள பல தொழிற்சாலைகளில் இருந்து நொய்யல் ஆற்றில் கலந்து, நீர் மாசுபடுகிறது என்ற சர்ச்சை ஒருபுறமிருக்க, பெய்துவரும் பருவமழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட துவங்கியிருக்கிறது. இந்தாண்டின் புதுவெள்ளமாக பாய்ந்து வரும் இந்நீர், நொய்யல் ஆற்றங்கரையோர விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.வெள்ளம் பெருக்கெடுப்பதால் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இவ்வழியாக பயணித்த மக்கள், பாரப்பாளையம் அல்லது மங்கலம் வழியாக செல்கின்றனர். அதே போன்று, நொய்யல் ஆற்றின் இடையில் உள்ள அணைமேடு மற்றும் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி ததும்புகிறது.

'செல்பி' ஆபத்து

நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், தரைப்பாலத்தை கடக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைப்பாளையம் தரைபாலத்தை கடந்து மக்கள் செல்லாத வகையில், போலீசாரின் உதவியுடன், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெருக்கெடுக்கும் தண்ணீரை கண்ட உற்சாகத்தில் பாலத்தின் மீது ஏறி நின்று 'செல்பி' எடுப்பது உள்ளிட்ட செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது; தவறி விழும் வாய்ப்புள்ளது.- நீர்வளத்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ