| ADDED : நவ 25, 2025 05:39 AM
உடுமலை: தொடர் மழையால், வறண்டு காணப்பட்ட உப்பாறு ஓடைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, நீரோட்டம் துவங்கியுள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 20க்கும் அதிகமான கிராமங்களில் உருவாகும் சிறு மழை நீர் ஓடைகள், இணைந்து உப்பாறாக மாறி தாராபுரம் பகுதியை நோக்கி செல்கிறது. கடந்த சில நாட்களாக, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, பெதப்பம்பட்டியில், 63 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. தொடர் மழை காரணமாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு உப்பாறு ஓடைகளில் நீரோட்டம் துவங்கியுள்ளது. ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாராபுரம் தாலுகாவில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு ஓடையில், கடந்த வாரம் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், அணைப்பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, உப்பாறு அணைப்பகுதியில், 34 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.