உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்பாலங்கள் : எழுந்தது சர்ச்சை

மேம்பாலங்கள் : எழுந்தது சர்ச்சை

திருப்பூர்: கோவை, அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் பகுதியிலிருந்து உப்பிலிபாளையம் வரை மேம்பாலம் 10.10 கி.மீ., தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டமிட்டு இப்பணி துவங்கியது. பணி நிறைவடைந்து சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடு பாலம் என இது அழைக்கப்படுகிறது. இந்த பாலம் யாரால் வந்தது என்பது குறித்த வாதம் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் இடையே எழுந்தது. இந்நிலையில், திருப்பூரில் மேம்பாலங்கள் தொடர்பாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. .

அ.தி.மு.க., முனைந்த திட்டத்தை செயல்படுத்த மனமில்லாத தி.மு.க.,

திருப்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டது. பி.என்., ரோட்டில் புஷ்பா சந்திப்பு முதல் பாண்டியன் நகர் வரை உயர் மட்டப் பாலம் கட்டும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, மண் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை - திட்டங்கள் பிரிவு வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தி.மு.க., அரசு இதைச் செயல்படுத்த மனமின்றி கிடப்பில் போட்டு விட்டது. சட்டசபையில் இதுகுறித்து நான் கேள்வி எழுப்பிய போது, இதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று துறை அமைச்சர் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் தொகுதி மக்கள் சார்பில் நான் முன் வைத்த 15 பணிகளில் சாத்தியமில்லாத பணிகள் என மூன்று பணிகளை இந்த அரசு கைவிட்டுள்ளது. பி.என்., ரோட்டில் நிலம் கையகப்படுத்தி ரோடு விரிவாக்கம் செய்து, பறக்கும் பாலம் கட்ட வேண்டும். இதன் மூலம் திருப்பூரிலிருந்து சேலம் பைபாஸ் ரோட்டை எளிதில் அடையலாம். பெருமாநல்லுார் உள்ளிட்ட வடக்கு பகுதிக்கு வாகனங்கள் செல்வது எளிதாக இருக்கும். பல தரப்பினர் நலன் கருதி முன் வைத்த இத்திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றவில்லை. - விஜயகுமார், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,(அ.தி.மு.க.,)

அ.தி.மு.க., அரசு கிடப்பில் போட்ட திட்டங்களை மறந்து பேசலாமா?

பி.என்., ரோடு பகுதியில் உயர்மட்ட பாலம் திட்டம் சாத்தியமில்லாத திட்டம் என்று, இங்கு சர்வே செய்த டாடா கன்சல்டன்சி நிறுவனம் தெளிவாக அறிக்கை அளித்தது. அதனடிப்படையில் தான் இத்திட்டம் கைவிடப்பட்டது. ரோட்டின் இரு புறத்திலும் தலா 20 அடி அளவு நிலம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. திருப்பூரைப் பொறுத்தவரை முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது தான் பல்வேறு இடங்களில் உயர்மட்டப் பாலங்கள் கொண்டு வரப்பட்டது. இந்தபாலங்கள் அனைத்தையும், அடுத்து வந்த அ.தி.மு.க., அரசு கிடப்பில் போட்டது. காமராஜ் ரோட்டில் திட்டமிடப்பட்ட பாலத்தை மாற்றி அதன் முழுப் பயனும் பெற முடியாத நிலையை அவர்கள் ஏற்படுத்தினர். எம்.ஜி.ஆர்., சிலை சுரங்க பாலம், எஸ்.ஆர்.சி., மில் பாலம், அணைப்பாளையம் ரிங் ரோடு பாலம் உள்ளிட்ட பாலங்கள் தி.மு.க., ஆட்சியின் போது துவங்கப்பட்டவை. அந்த ஒரு காரணத்துக்காகவே இப்பணிகளை அ.தி.மு.க., கிடப்பில் போட்டது. மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் முனைப்புடன் இவை முடிக்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது; சில பாலங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது கோவையிலிருந்து திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான முயற்சிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. --- தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ