விதிமுறையை பின்பற்றுங்க! ஸ்கேன் சென்டர்களுக்கு அட்வைஸ்
திருப்பூர்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 'பிறப்பிற்கு முன் பாலினம் கண்டறியும் தொழில்நுட்ப முறைகள், சட்டம் செயல் திட்ட மேம்பாடு' என்ற தலைப்பில், மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.கோவையில் நடந்த இப்பயிற்சி முகாமில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை பணியாளர்கள், அரசு, தனியார் ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர்.இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி கூறியதாவது:கடந்த, 1994ல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டும், தற்போது வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சிறிய தவறுகள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களும் பொறுப்புடன் விதிமுறைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். ஸ்கேன் சென்டர் சார்ந்த அனைத்து விபரங்கள், செயல்பாடுகளுக்கும் பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும்.முந்தைய நாட்களில், அனைத்து விவரங்களும் மனித ஆற்றல் வாயிலாக, எழுத்து வடிவில் சமர்பிக்க வேண்டியிருந்தது. தற்போது, புதிய 'வெப் போர்டல்' துவக்கப்பட்டு அனைத்தும் 'ஆன் லைன்' வாயிலாக சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை எளிதாக பயன்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.