வன உரிமை சட்டம்; மலைவாழ் மக்களுக்கு பயிற்சி
உடுமலை; மத்திய அரசின் வன உரிமை சட்டத்தின் கீழ், மலைவாழ் மக்களுக்கான உரிமைகள் குறித்து, வன உரிமைகள் குழு பிரதிநிதிகளுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு, 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு உரிமைகள் வழங்கியுள்ளது. இதனை செயல்படுத்துவது மற்றும் மலைவாழ் மக்கள் பயன்படுத்திக்கொள்வது குறித்து, மலைவாழ் மக்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், மலைவாழ் மக்களில், மாவட்டத்திற்கு இருவர், முதன்மை பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, கன்னியாகுமரியில் பயிற்சியளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்டம் தோறும், பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மை பயிற்சியாளர்கள் வாயிலாக, வன உரிமை குழு பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமை குழு தலைவர், செயலர் மற்றும் ஒரு பெண் பிரதிநிதியை கொண்ட வன உரிமைகள் குழு பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை தாசில்தார் நந்தகோபால் தலைமை வகித்தார். முதன்மை பயிற்சியாளர்கள் செல்வன், சாத்துக்குட்டி ,குப்புச்சாமி ஆகியோர் பயிற்சியளித்தனர்.இதில், வன உரிமை சட்டம், தனி நபர் உரிமை, சமூக வன உரிமைகள், வாழ்விட உரிமைகள், மேம்பாட்டு உரிமைகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ், வனப்பொருட்கள் சேகரிப்பு, சந்தை வாய்ப்பு, விவசாயம், நில உரிமை பட்டா வழங்குதல், ரோடு, குடிநீர், ஓட்டுரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மலைவாழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெறுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.மேலும், வனம், வன விலங்குகள் மற்றும் வனச்சூழல் காப்பதில், மலைவாழ் மக்களின் பங்கு குறித்தும் விளக்கப்பட்டது.
புதிதாக ஐந்து மலைவாழ்மக்கள் குடியிருப்பு சேர்ப்பு
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி, குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, ஈசல்திட்டு, திருமூர்த்திமலை, கோடந்துார், ஆட்டுமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கரட்டுப்பதி என, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 6 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.தற்போது புதிதாக, திப்பிப்பாறை, பாலமங்கலம், மயிலாடும்பாறை, இந்திராபுதுநகர், பூச்சிமேடு ஆகிய, 5 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும், வன உரிமைச்சட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.-