உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளநீர் உற்பத்தி முற்றிலுமாக பாதிப்பு விலை கிடைத்தும் பயனில்லை

இளநீர் உற்பத்தி முற்றிலுமாக பாதிப்பு விலை கிடைத்தும் பயனில்லை

உடுமலை,; தேவை அதிகரித்துள்ளதால், இளநீர் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், வெள்ளை ஈ தாக்குதலால் உற்பத்தி முற்றிலுமாக குறைந்துள்ளதால், விலையேற்றம் விவசாயிகளுக்கு பயனற்றதாகி விட்டது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில், தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது, இளநீருக்கென பிரத்யேகமாக ஓட்டு ரக தென்னை மரங்களை, விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. மரங்கள் பச்சையம் இழந்து, கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்தாண்டு, உற்பத்தி சீரான நிலையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல், தென்னை மரங்களை கடுமையாக பாதித்துள்ளது.வழக்கமாக கோடை காலத்தில், தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்தி அதிகரிக்கும். இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக உற்பத்தி முற்றிலுமாக குறைந்து விட்டது.தற்போது நேரடியாக தென்னந்தோப்புகளுக்கு சென்று, இளநீர் ஒன்று, 40 - 50 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது: இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நோய்த்தாக்குதல்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை