புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி விடுவிக்கப்பட வேண்டும்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி உள்ளிட்டோர் அமைச்சரை வரவேற்றனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்த அமைச்சர் சிகிச்சை முறைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மருத்துவமனை அலுவலர் மற்றும் ஊழியர் விவரங்கள், நோயாளிகள் எண்ணிக்கை, பாதுகாப்பு வழிமுறைகள், மருந்து இருப்பு, மருத்துவக்கல்லுாரி செயல்பாடு ஆகியன குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். புற்று நோய் சிகிச்சை மையம் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு அமைக்கும் பணியை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டார். ரோட்டரி திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்படும் மையம் குறித்து அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்முருகநாதன், அமைச்சருக்கு விளக்கினார். 'நமக்கு நாமே' திட்டத்தில் இந்த மையத்துக்கான நிதி விடுவிப்பதில் நிலவும் தாமதம் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் ஆய்வின் போது, துாய்மைப்பணியாளர் தரப்பில், கூலி பிரச்னை குறித்து மனுஅளிக்கப்பட்டது. தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக துாய்மைப்பணி மேற்கொள்ளப்படுவது குறித்து கேட்டறிந்த அமைச்சர் துாய்மைப் பணியாளர் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.