கந்தசஷ்டி விழா: காப்பு அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, முருகப்பெருமான் மற்றும் பக்தர்கள் காப்பு அணிந்து நேற்று கோலாகலமாக துவங்கியது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஷண்முக சுப்பிரமணிய சுவாமியும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், நீல வண்ண மலர்கள் அலங்கார பூஜைகள் நடந்தது; மாலையில், பக்தர்கள் காப்பு அணிந்து, சஷ்டி விரதம் துவங்கினர்.காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியர் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், கருமத்தம்பட்டி விராலிக்காடு ஸ்ரீசென்னியாண்டவர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகளுடன், கந்தசஷ்டி விழா துவங்கியது.மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், முருகப்பெருமானுக்கு, காப்பு அணிவித்து பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்பு அணிந்து, விரதம் துவங்கப்பட்டது. தினசரி பூஜைகளை தொடர்ந்து, வரும் 7ம் தேதி மாலை, சூரசம்ஹார விழாவும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவ விழாவும் நடக்க உள்ளது.நேற்று முதல், காப்புக்கட்டிய பக்தர்கள் விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சாத பால் அல்லது பழ வகைகள் மட்டும் சாப்பிடலாம்; சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, விரதம் இருந்த பக்தர்களுக்கு மட்டும், கோவில்களில், மோரில் ஊற வைத்த வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்படும்.வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் திருக்கல்யாண உற்ச வத்தை கண்டுகளித்த பின்னரே, காப்பு அகற்றி, திருக்கல்யாண விருந்து சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கந்தப்பெருமான் கோவில்
திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள கொங்கணகிரி ஸ்ரீகந்தப் பெருமான் கோவில் உள்ளது. கோவிலில் 13ம் ஆண்டு கந்தசஷ்டி, சூரசம்ஹார மற்றும் திருகல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடை பெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்தப்பெருமானை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்கள் விரத காப்பு அணிந்து கொண்டனர். வரும், 7ம் தேதி மாலை 4:30 மணிக்குஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தப் பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் வேல் பூஜை நடக்கிறது. 5:30 - 7:00 மணிக்குள் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 8ம் தேதி காலை, 6:00 - 7:30 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை மக்கள் நல அறக்கட்டளை மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.