உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பைகளுக்கு தீவைப்பது தொடர்கிறது

குப்பைகளுக்கு தீவைப்பது தொடர்கிறது

அவிநாசி: அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் நாள்தோறும் துாய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன; ஈரோடு ரோட்டில் சந்தை கடை எதிரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரப் பூங்கா கிடங்கில் சேமித்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. சில பகுதிகளில், துாய்மைப்பணியாளர்களிடம் கொடுக்க முடியாதபோது, கட்டடக் கழிவுகள், நிறுவனத்திலிருந்து கொட்டப்படும் கழிவுகள், தெர்மோகோல், பீங்கான், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்கள் போன்றவற்றை ஆங்காங்கே மறைவான இடத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள வீதிகளிலிருந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேவையில்லாத பொருட்களை போட்டு விட்டு செல்கின்றனர். நல்லாற்று நீர்வழிப் பாதையான சாலையப்பாளையம் செல்லும் பகுதியிலும், புது பஸ் ஸ்டாண்ட் கைகாட்டிப்புதுார் பிரிவிலிருந்து சங்கமாங்குளம் செல்லும் வழியில் நீரோடை பகுதியிலும்,ஆட்டையாம்பாளையம் செல்லும் வழியில் நல்லாற்று பாலத்தின் அருகிலும் இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகள் டன் கணக்கில் குவிந்துள்ளன. இதிலிருந்து பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், இரும்பு, செம்பு கம்பிகள் என கழிவுகளில் இருந்து பிரித்து எடுத்து பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் பெறுவதற்காக ஒரு சிலர் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரத்திலும் கொட்டிக் கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். சுற்றுப்புற சூழலுக்கு பெரும் சீர்கேடு அவை நாள் முழுவதும் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகின்றனர். சில சமயங்களில் துாய்மை பணியாளர்கள் சிலர், குப்பைகளை அகற்றி உரப் பூங்காவிற்கு கொண்டு செல்வதில், அக்கறை இல்லாமல் ஆங்காங்கே உள்ள குப்பை மேட்டுக்கு தீ வைத்து செல்கின்றனர். அவ்வகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் கைகாட்டிப்புதுாரில் இருந்து சங்கமாங்குளம் செல்லும் வழியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய தெர்மோகோல்கள் என மலை போல குவிந்து கிடந்ததை, மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால், தீ கொழுந்து விட்டு எரிந்து கரும் புகைமூட்டம் உயர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பரவியது. புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மறுசுழற்சி செய்ய வேண்டும் அவிநாசி நகராட்சியாக மாற்றம் செய்வதற்கு முன்பிருந்த எண்ணிக்கையிலேயே துாய்மை பணியாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர். கூடுதலாக துாய்மை பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். கண்ணாடி, பீங்கான், இரும்பு மற்றும் தகரங்கள் போன்ற கடினமான அதே சமயத்தில் துாய்மை பணியாளர்களுக்கு உடல் உறுப்புகளில் காயங்கள் ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை அப்புறப்படுத்த போதுமான நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாகவே குப்பை கழிவுகளை கைகளால் அள்ளும் நிலை தான் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்தி நாளொன்றுக்கு அவிநாசி நகராட்சி பகுதியில் சேகரமாகும் 8 முதல் 10 டன் குப்பை கழிவுகளை உடனடியாக மறுசுழற்சி செய்யும் வகையில் நவீனப்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்கள், வணிக நிறுவனங்கள் ஹோட்டல்கள் பேக்கரிகள் மீது அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகள், தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை தரவும் கட்டாயம் அறிவுறுத்த வேண்டும். - மக்கள் சேவகன் அறக்கட்டளையினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை