கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகும் குப்பை கிடங்குகள்
திருப்பூர்:'திருப்பூரில் வீடு, பொது இடங்களில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவு முறையாக கையாளப்பட்டு அகற்றப்படாததால், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக, குப்பைக் கிடங்குகள் மாறி வருகின்றன; 'இது, மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்' என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் போதிலும் உட்கட்டமைப்பில், அதற்கேற்ற வளர்ச்சி இல்லை. சுத்தமான காற்று, நீர், நிலம் என்பது, திருப்பூரை பொருத்தவரை சவாலான விஷயமாகத் தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், ஒட்டு மொத்த திருப்பூரிலும், குப்பை மற்றும் கழிவு மேலாண்மை தோல்வியடைந்திருக்கிறது. லட்சக்கணக்கான வீடு, ஓட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவு திறந்தவெளியில் தான் கொட்டப்படுகின்றன. திருப்பூர் மாநகராட்சி உட்பட பிற பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் குப்பைக் கொட்ட இடமில்லாத நிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பாறைக்குழியிலும், ஊராட்சி நிர்வாகங்கள் குளம், குட்டை உட்பட நீர்நிலையோரங்களிலும் குப்பையை கொட்டி வருகின்றன. சென்னை சவீதா பல்கலை, கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மைய தலைவர் அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது:சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி போன்ற வளர்ந்த நகரங்களில் குப்பை மேலாண்மை என்பது, பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது; குப்பைக் குவியல் பெருகி வருகிறது; அந்த இடங்கள், தெருவில் திரியும் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியிருக்கிறது; அவை, அங்கு உணவு தேடி அலைகின்றன. இது, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு பேராபத்தாக இருக்கும்.திருப்பூர் மாநகராட்சியில், தினசரி, 700 முதல், 800 டன் குப்பை வெளியேறுகிறது. இதில், 160 டன் குப்பை மட்டுமே நுண் உரமாக்கல் மையம் வாயிலாக சேகரிக்கப்படுகிறது. எஞ்சிய குப்பை, பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது. இது, நிலத்தடி நீர் மாசுபாடுக்கு முக்கிய காரணமாக இருக்கும்.கிராமப்புறங்களிலும் தெருவெங்கும் குப்பை குவியலை காண முடிகிறது. அங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்வது தான் வேதனையின் உச்சம். இவ்வாறு, குப்பை நிறைந்து கிடக்கும் இடத்தில் மேயும் மாடுகள், குப்பையில் உள்ள கழிவுகள் மற்றும் பாலிதீன் உட்கொள்ளும் போது, பாலிதின் நுண் துகளையும் உட்கொள்ளும்; இந்த நுண்துகளில் கலந்துள்ள ரசாயனம், கேடு விளைவிக்க கூடியது. ஒரு வேளை அவற்றின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வது, மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்; மனிதர்களுக்கு ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், பாலிதீன் நுண்துகள்களை உட்கொள்ளும் கால்நடைகள், 'பிளாஸ்டிகோசிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வாய்ப்பும் உண்டு. தீர்வு என்ன? குப்பைகளை தரம் பிரித்து, முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் வகையிலான குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் பாலிதீன் இல்லாத, பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாடுகளை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு விடாமல், அவற்றின் உரிமையாளர்களை சட்ட விதிகளுக்கு உட்படுத்த வேண்டும். தெருவில், கால்நடைகளை திரிய விடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். சுற்றுச்சுவர் பாதுகாப்பில்லாத திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகள் குவிந்த கிடக்கும் இடத்தில், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்கின்றன. அவை, 'பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள உணவை உட்கொள்ளும் போது, பாலிதீன் கழிவில் கலந்துள்ள பாலிதின் நுண்துகள்களும் உட்புகும் அபாயம் இருக்கிறது; அதனால், பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது'