கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
உடுமலை: உடுமலை அருகேயுள்ள, குடிமங்கலம், பொன்னேரி, கோட்டமங்கலம் கிராமங்களில், கால்நடைத்துறை சார்பில், 8-வது சுற்று கோமாரி நோய்க்கான தடுப்பூசி திட்ட முகாம் நடந்தது. கால்நடைத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன் கூறுகையில்,'' உடுமலை கோட்டத்தில், 63 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி வழங்கும் முகாம், கடந்த, 29ம் தேதி துவங்கி, ஒவ்வொரு கிராமத்திலும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொன்னேரி கால்நடை மருந்தகத்திற்குபட்ட, பொன்னேரி மற்றும் கோட்டமங்கலம் கிராமத்தில் நேற்று முகாம் நடந்தது. இம்முகாம்களில், 1,800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர், கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். இம்முகாமில் பொன்னேரி கால்நடைத்துறை டாக்டர் கோவிந்தராசு, கால்நடை ஆய்வாளர், சுதாபிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் அசோக்குமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.