நல்ல காலம் பிறக்குது! நடந்தாய் வாழி காவிரியில் இணைகிறது நல்லாறு
நல்லாற்றை நல்லாறாக மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை வலுப்படுத்தி வந்தது 'தினமலர்' நாளிதழ். இந்த எண்ணம் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் துவங்கியுள்ளது. அவிநாசி துவங்கி திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் பகுதியில் பயணிக்கிறது நல்லாறு. ஆறு உருவாகி கடந்து வரும் பல கி.மீ., துாரமும் பெருமளவு ஆக்கிரமிப்பால் சுருங்கி கிடக்கிறது. திருமுருகன்பூண்டியைக் கடந்து, அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம், வெங்கமேடு, போயம்பாளையம், பிச்சம்பாளையம் பகுதிகளைக் கடந்து நஞ்சராயன்குளம் சென்று சேர்கிறது. முறையாக துார் வாராமல் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து, 150 முதல் 200 அடிக்கு மேல் அகலம் உள்ள ஆறு, வாய்க்கால் போல் மாறியுள்ளது. ஆற்றை துாய்மைப்படுத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவணன், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். மனு குறித்து பவானிசாகர் அணைக் கோட்ட நீர்வளத்துறை ெசயற்பொறியாளர் அருள்அழகன் அளித்த பதில்: நல்லாற்றை துாய்மைப்படுத்தவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றும் வகையிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் - இந்தியா என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து டிரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் திட்டமான 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தில் நல்லாற்றை துாய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாநகராட்சி பகுதியில், நல்லாற்றில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களும் அமைக்கவும் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் பெற்று பணிகள் துவங்கும். இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -