வெல்லம் விற்பனைக்கு அரசு உதவி தேவை
உடுமலை: உடுமலை பள்ளபாளையம், போடிபட்டி, அம்மாபட்டி, சுண்டக்காம்பாளையம், சாளரப்பட்டி உட்பட பகுதிகளில், கரும்பு சாகுபடி பரப்பு அதிகமுள்ளது.ஏழு குள பாசனம் மற்றும் அமராவதி புதிய ஆயக்கட்டு, பகுதியில், சாகுபடி செய்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்ல உற்பத்திக்கும், விவசாயிகள் கரும்பை விற்பனை செய்து வந்தனர். அமராவதி ஆலையில் உற்பத்தி இல்லாததால், தங்கள் தோட்டங்களிலேயே வெல்ல உற்பத்திக்காக ஆலை அமைத்துள்ளனர்.வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது:இங்கு உற்பத்தியாகும், கரும்பு வெல்லம், கேரளாவுக்கு, அதிகளவு விற்பனையாகி வந்தது. கேரளா மூணாறு, மறையூர், பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, உடுமலையில் இருந்து வெல்லம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, வெல்லம் விலை பல மடங்கு சரிந்து விட்டது. கரும்பின் பிழிதிறன் அடிப்படையிலேயே வெல்லத்தின் தரமும் இருக்கும்.கடந்தாண்டு, நிலவிய சீதோஷ்ண நிலை காரணமாக, நல்ல பிழிதிறன், சர்க்கரை கட்டுமானம் உடைய கரும்பு உற்பத்தியாகியுள்ளது. எனவே, தோட்டத்திலேயே ஆலை, அமைத்து வெல்லம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.இப்பகுதியில், உற்பத்தியாகும் வெல்லத்தை, கேரளாவில், விற்பனை செய்ய, அரசு உதவினால், இத்தொழில் பாதிப்பிலிருந்து மீளும். இவ்வாறு, தெரிவித்தனர்.