உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்

அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்

திருப்பூர் : எப்படியாவது 'குரூப்' தேர்வு எழுதி அரசு பணிக்கு சென்று விட வேண்டும் என்பது மாணவர்களின் லட்சிய கனவாக இருக்கிறது; ஆனாலும் அது சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. தொடர் பயிற்சி, விடாமுயற்சி, சுய பரிசோதனை மூலம் பொது அறிவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அரசு பணி, எட்டும் கனி என்பதை திருப்பூர் மாவட்ட போட்டித் தேர்வர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி மையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. உடுமலை மற்றும் குடிமங்கலத்திலும் புதிய பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகள், வேளாண் அலுவலருக்கான தேர்வு, எஸ்.ஐ., - கான்ஸ்டபிள் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்களின் திறனை பரிசோதிப்பதற்காக, தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.கடந்த 2021 ஏப்ரல் முதல் நடப்பாண்டு மே மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 51 பேர் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு அலுவலராக பணியாற்றிவருகின்றனர்.காங்கேயத்தில் புதிய பயிற்சி மையம் உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரூப் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் அனைவரும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி மையத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தேர்வை திறம்பட எதிர்கொண்டு, வெற்றி இலக்கை அடைய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அரசு நடத்தும் இலவச வகுப்புகள்

சாதாரணமாக எடை போடாதீர்கள்ஜவஹர், இடுவம்பாளையம்:முதன்முதலாக, கடந்த 2022ல், 'குரூப் - 4' தேர்வு எழுதினேன். அப்போது பயிற்சி வகுப்புக்கெல்லாம் செல்லவில்லை. யூடியூப் வீடியோக்களை பார்த்து, சுயமாகவே தயாரானேன். அப்போது என்னால் வெற்றிபெறமுடியவில்லை.நண்பர் ஒருவர் கூறியபோதுதான், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 'குரூப்' தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுவது தெரிந்தது. போய்தான் பார்ப்போமே என்று, வகுப்புக்கு சென்றேன். அரசு நடத்தும் இலவச வகுப்பு என்பதால், சாதாரணமாக எடைபோடக்கூடாது என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.தனியார் மையங்களைவிட, வேலைவாய்ப்பு அலுவலக மையத்தில், 'குரூப்' தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள், சிறப்பாக வழிகாட்டினர். தினசரி வகுப்புகள் நடத்துவதோடு, வாரந்தோறும் நடத்தப்படும் மாதிரித்தேர்வுகள், எனது அறிவை மேலும் மெருகேற்றின. முழு கவனத்தோடு படித்தேன், 2024ல் நடந்த தேர்வில் வெற்றி பெற்றேன். தற்போது, திருப்பூர் வணிக வரி கோட்ட அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்துவருகிறேன்.

மாதிரித்தேர்வுகள் பக்கபலம்

சாதித்துக்காட்டலாம், நிஜம்எம்.எஸ்.சி., கணிதம் படித்துள்ளேன். 'குரூப்' தேர்வுகள் குறித்து முதலில் எனக்கு எதுவும் தெரியாது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் சேர்ந்தபிறகுதான், 'குரூப்' தேர்வு குறித்தும்,கேள்விகள் அமையும் விதம் பற்றியும் தெரிந்துகொண்டேன். முதல்முறை தேர்வு எழுதியபோது, 300க்கு, 210 மதிப்பெண்தான் பெறமுடித்தது. தொடர் பயிற்சிகளுக்குப்பிறகு, இரண்டாவது முறையாக, கடந்த 2024ல் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். தற்போது, வால்பாறையில், சோலையாறு வடிநில கோட்டத்தில் தட்டச்சராக பணிபுரிகிறேன். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 'குரூப்' தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள எந்த தளத்திலும் அமர்ந்து படிக்கலாம். தேவையான புத்தகங்களை வாங்கித்தருகின்றனர். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், கருப்பு பேனா பயன்படுத்திதான் விடை அளிக்கவேண்டும்; நேர மேலாண்மை என, 'குரூப்' தேர்வு எப்படி நடக்குமோ அச்சு அசல் அப்படியேதான் மாதிரித்தேர்வு நடத்துகின்றனர். அதனால், புதிதாக 'குரூப்' தேர்வு எழுதுவோருக்கு, மாதிரித்தேர்வுகள் பக்கபலமாக அமைகின்றன.'குரூப்' தேர்வுக்கு தயாராவோர், தவறாமல் மாதிரித்தேர்வுகள் எழுதவேண்டும். வெவ்வேறு வினாத்தாள்களை பெற்று, நண்பர்களுக்குள் கூடுதல் தேர்வுகள் நடத்தி பரீட்சித்துப்பார்ப்பதும் நல்லதுதான்.- நர்மதா, பெருந்தொழுவு

பள்ளி பாடப்புத்தகங்கள்

ஒருமித்து படித்தால் பலன்கோவை மாவட்டம், சின்னமநாயக்கன்பாளையம்தான் எனது சொந்த ஊர். அருகாமை காரணமாக, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் சேர்ந்து குரூப் - 4 தேர்வுக்கு தயாரானேன். தினமும் காலை முதல் மாலை, 6:00 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் படிப்பேன்; மாலையில் வீட்டுக்கு சென்றபின்னரும், படிப்பு தொடரும்.சமூக வலைதளங்களிலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினா - விடை சார்ந்த பதிவுகளையே பார்ப்பேன். எனது பொழுதுபோக்கே, 'குரூப்' தேர்வுக்காக படிப்பது என்றாகிவிட்டது. குரூப் - 4 தேர்வில் வெற்றிபெற்று, தற்போது, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துவருகிறேன்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பயிற்சி வகுப்பு, தேவையான அனைத்துபுத்தகங்களையும் உள்ளடக்கிய நுாலகம், சிறந்த வழிகாட்டிகள் என எல்லாவகையான கட்டமைப்புகளும் உள்ளன. குரூப் தேர்வுகளில், பள்ளி பாட புத்தகங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாம் ஒருமித்த மனத்தோடு, முழு கவனத்தோடு படித்தால் மட்டும் போதும், குரூப் தேர்வில் எளிதாக வெற்றிபெறலாம்.- அருண்குமார், சின்னமநாயக்ன்பாளையம், கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஜூன் 21, 2025 09:03

அரசு பணிகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது பெறவேண்டும் என்று ஏன் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்? எல்லாம் அந்த லஞ்சப்பணத்தை வேலை செய்யாமல், வேலை செய்வதற்கு லஞ்சம் பெற்று சரி செய்துகொள்ளலாம் மேலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது என்று தான் தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை