கிடப்பில் கிராமசபா தீர்மானம்; விவசாயிகள் கடும் அதிருப்தி
திருப்பூர் ; தெரு நாய்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கிராம சபாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் கிடப்பில் போடப்படுவது, கால்நடை வளர்ப்போர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.'கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்' என்ற நோக்கில் தான், கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் அருகே வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், கடந்த, 6 மாதங்களுக்கு மேலாகவே, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தெரு நாய்கள் கடிக்கின்றன; இதில், கோழி, ஆடுகள் பலியாகின்றன.'ஊராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், வெறி நாய்கள் போன்று மாறி, கால்நடைகளை கடித்து குதறுகின்றன. இதில், கால்நடைகள் பலியாகின்றன. விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை அழித்து வருவதோடு, பொதுமக்களையும் கடித்து, உயிர் பயத்தை ஏற்படுத்தி வருகின்றன.தெரு நாய்களை கட்டுப்படுத்த, உள்ளாட்சி நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்' என, காந்தி ஜெயந்தியன்று (அக்., 2) நடந்த கிராம சபாவில், விவசாயிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கூறியதாவது:தெரு நாய்கள் விவகாரத்தில் காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராம சபாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அதே தீர்மானத்தை, குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபாவிலும் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சார்பில் ஊராட்சிகளுக்கு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுவின் அடிப்படையில், பல கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கிராமசபாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததும், அந்த தீர்மானங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை சம்மந்தப்பட்ட துறையினர் விளக்கம் அளிக்காமல் இருப்பதும், கிராம சபா கூட்டங்களின் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது; அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.