பசுமை மின்சாரம்; பூமிக்கான சேவை
பல்லடம்: பல்லடம் மின்வாரியம் சார்பில், மத்திய அரசின் சோலார் மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. செயற்பொறியாளர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாகப் பொறியாளர் கருணாம்பிகா மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்கள், வங்கி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கூறியதாவது:வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும், பிரதமரின் சோலார் மின் திட்டம் கொண்டுவரப்பட்டது. பணத்தை எவ்வாறு வங்கியில் டெபாசிட் செய்து நமக்குத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறோமோ அதுபோல, பகலில் நாம் உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரத்தை, நமது தேவை போக மீதம் உள்ளதை மின்வாரியத்துக்கு வழங்கலாம். ஒரு தொழிலில் முதலீடு செய்வதை போன்று தான் சோலார் மின்சாரத்தில் நாம் செலவழிக்கிறோம். இதில் நாம் முதலீடு செய்த பணத்தை, 5 ஆண்டுகளில் திரும்ப எடுத்து விடலாம். பல்வேறு மின் உற்பத்தி முறைகள் இருந்தாலும், பசுமை மின் உற்பத்தியான சோலார் முறையானது சுற்றுச்சூழலுக்கு மிகச்சிறந்தது. சோலார் மின்சாரமானது, உங்களை அறியாமலேயே நீங்கள் பூமிக்கு செய்யும் சேவையாகும். பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு தேவை. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, சோலார் மின் திட்டத்தில் வழங்கப்படும் மானியம், மின் தகடுகளை பராமரிக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், வங்கி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கேட்டறிந்தனர். மின்வாரிய மற்றும் வங்கி அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். விழிப்புணர்வு, செயல் விளக்கம் தேவை நேற்று நடந்த கூட்டத்தில், தனியார் சோலார் நிறுவனத்தினர் தான் அதிக அளவில் பங்கேற்றனர். பொதுமக்கள் சொற்ப அளவிலேயே இருந்தனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த சோலார் மின் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற கூட்டங்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, செயல் விளக்குத்துடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.