மண் வளம் மேம்பட பசுந்தாள் உரம்
உடுமலை; பசுந்தாள் உரப்பயிர்களை பயன்படுத்தி, மண் வளத்தை மேம்படுத்த உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்று பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும், குறிப்பிட்ட இடைவெளியில், காய்கறி சாகுபடி செய்கின்றனர். தொடர் சாகுபடியால், மண் வளம் பாதித்து, விளைச்சல் குறைகிறது. இதனால், கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் குறையும் போது, சாகுபடியை கைவிட்டு, மண் வளம் மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடுகின்றனர். தொழு உரங்களான சாணம், கோழி எரு ஆகியவற்றை விளைநிலங்களில், நேரடியாக வீசி கோடை உழவு செய்கின்றனர். மேலும், பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, கொழுஞ்சி உள்ளிட்ட பயிர்களை விதைக்கின்றனர். தென்னந்தோப்புகளில், மரங்களின் வட்டப்பாத்தியில், பசுந்தாள் உரத்தை விதைப்பு செய்வது வழக்கம். இத்தகைய பசுந்தாள் பயிர்களை விதைப்பு செய்து, பூக்கும் தருணத்தில், மடக்கி உழவு செய்வதால், மண் வளம் மேம்படும். இந்தாண்டும் சணப்பை பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'மண் வளத்தை மேம்படுத்த, பசுந்தாள் உரப்பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான தருணங்களில், விதை கிடைப்பதில்லை. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து விதை வாங்கி வருகிறோம்,' என்றனர்.