நடக்காத குறைகேட்பு கூட்டம்; மாற்றுத்திறனாளிகள் வேதனை
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி மகாதேவன், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என மனு அளித்தார். அவர் கூறியதாவது:திருப்பூரில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவதில்லை.திங்களன்று நடத்தப்படும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், வெள்ளிக்கிழமை மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து, நுழைவாயிலிலிருந்து, கூட்ட அரங்கிற்கு அழைத்துவர பேட்டரி வாகனம் இயக்கப்பட்டுவந்தது. தற்போது, பல மாதங்களாக அந்த வாகன இயக்கத்தை நிறுத்திவிட்டனர். இதனால், முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.இலவச ஸ்கூட்டர் வழங்குவதில் குளறுபடிகள் நடக்கின்றன. இதுபோன்று மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்னைகளை கலெக்டரின் நேரடி கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வு காண, சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்துவது அவசியமாகிறது.மூன்று மாதத்துக்கு ஒருமுறை, குறைகேட்பு கூட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்த்து வைக்க, புதியதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.