ஜி.எஸ்.டி., திருத்தம் புரிந்து கொள்ளணும்! விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏற்றுமதியாளருக்கு விளக்கம்
திருப்பூர்; ''ஜி.எஸ்.டி., திருத்தம் என்ன என்பதை முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்; அப்போதுதான், மாதந்தோறும் தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்,'' என,ஜி.எஸ்.டி., ஆலோசகர் பாஸ்கர் பேசினார்.ஏற்றுமதி நிறுவனங்களுக்கான, ஜி.எஸ்.டி., திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கை, துணை தலைவர் இளங்கோவன், பொது செயலாளர் திருக்குமரன் துவக்கி வைத்தனர். இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., பதிவில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசினர்.ஜி.எஸ்.டி., ஆலோசகர் பாஸ்கர் பேசியதாவது:விற்பனை, நிதி, கொள்முதல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைந்து அறிக்கையாக அளித்தால் மட்டுமே, மாதாந்திர அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். எங்கும், தகவல் விடுபடக்கூடாது.ஜி.எஸ்.டி., என்பது, 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் மாறிவிட்டது. ஜி.எஸ்.டி., திருத்தம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும்; அப்போதுதான், ஜி.எஸ்.டி., 'ரிட்டர்ன்' பதிவு சரியாக இருக்கும்.ஒவ்வொரு தகவல் பதிவுக்கான படிநிலை சரியாக இருந்தால் மட்டுமே, முழுமையாக தாக்கல் செய்ய முடியும். கொள்முதல் செய்த கணக்கை நீங்கள் சரியாக பதிவு செய்தாலும், விற்பனை செய்தவர் சரியாக பதிவு செய்யாவிட்டால், உங்கள் கணக்கு பதிவிலும் பிரச்னை வரும். ஒருங்கிணைந்த தகவல்களுடன், 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த, 2017ம் ஆண்டுக்கு முன், 'இ-வே' பில் இல்லை; இருந்தாலும், தொழில் செய்துவந்தோம். தற்போது, 'இ- வே' பில்லில், பின்கோடு எண் சரியாக இல்லை என்றாலும், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில், வாகன தணிக்கை செய்வதால், மிகச்சிறிய 'கிளரிக்கல்' தவறுகளுக்கு கூட, அதிக அபராதம் விதிக்கின்றனர். நாம் தான், சரிவர தயாரித்து அனுப்ப வேண்டும். ஆதார் மற்றும் பான் கார்டு விவரம் பதிவு செய்யப்படுவதால், வங்கி கணக்கையும் சேர்த்து முடக்க நேரிடுகிறது.ஏதாவது ஓரிடத்தில் சிறு தவறு நடந்தாலும், ஜி.எஸ்.டி., பதிவுக்கு பல்வேறு தகவல்களை கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஜி.எஸ்.டி., பதிவில், மாதந்தோறும், '3பி' பதிவு செய்ய வேண்டும்; இல்லாதபட்சத்தில், ஜி.எஸ்டி., போர்டலுக்குள் நுழைய முடிவதில்லை.புதிய திருத்தங்கள் என்ன என்பதை முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஜி.எஸ்.டி., பதிவு செய்தால் மட்டுமே, பிழையில்லாமல் பதிவு செய்ய முடியும். அடிக்கடி மாறும் விதிமுறைகள் குறித்து, நாம் தான் கவனமாக அறிந்துகொள்ள வேண்டும். தினமும், ஜி.எஸ்.டி., களத்தை கண்காணித்து, தெரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஆடிட்டர் விஷ்ணுகுமார்,ஜி.எஸ்.டி., பதிவு மற்றும் புதிய திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, ஏற்றுமதி நிறுவன அலுவலர்களின், ஜி.எஸ்.டி., பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.