உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வந்தார்... சென்றார்! தேர்தல் ஆணைய இயக்குனர் மின்னல் வேக ஆய்வு

 வந்தார்... சென்றார்! தேர்தல் ஆணைய இயக்குனர் மின்னல் வேக ஆய்வு

திருப்பூர்: இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், நேற்று மின்னல் வேகத்தில் ஆய்வு நடத்தினார். திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, கடந்த நவ. 4ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,536 பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, தீவிர திருத்த படிவங்கள் வழங்கினர். தேர்தல் பிரிவினருக்கு பக்கபலமாக, வருவாய்த் துறை, மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு, வேளாண், தோட்டக்கலைத்துறை உள்பட மற்ற அரசு துறையினரும், வாக்காளர்களின் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷன் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, நேற்று ஆய்வு நடத்தினார். முதலாவதாக அவிநாசிக்கு சென்ற அவர், தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றுவரும், தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள்; முனியப்பன் கோவில் வீதி மற்றும் வடக்கு ரத வீதி பகுதிகளில், பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர் வீடு தேடிச் சென்று, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருப்பூர் வடக்கு தொகுதியில், ஸ்ரீபதி நகர், 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனில், பி.எல்.ஓ.,க்களின் களப்பணிகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற இயக்குனர், ஆன்லைன் பதிவேற்ற பணிகளை பார்வையிட்டார். பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு சென்று, பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறுவதில் அரசியல் கட்சியினரின் தலையீடு உள்ளது. பி.எல்.ஓ.,க்களுக்கு அழுத்தம் கொடுத்து, இறந்த வாக்காளர், இரட்டை பதிவு வாக்காளர்களின் படிவங்களை ஆளுங்கட்சியினர் வாங்கிச் சென்றுள்ளனர் என, அ.தி.மு.க. வினர், கலெக்டரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளனர். தேர்தல் கமிஷன் இயக்குனரின் வருகையை அடுத்து, அனைத்து தொகுதிகளிலும், அரசியல் கட்சியினர் தலையீடு இல்லாதவகையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஓ.,க்கள் உஷார் படுத்தப்பட்டனர். பி.எல்.ஓ.,க்களை வாக்காளர் வீடு தேடிச் சென்று படிவங்கள் பெறச்செய்து, குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இயக்குனரை அழைத்துச்சென்று, ஆய்வு நடத்தச் செய்தனர். இயக்குனரும், 'ஜெட்' வேகத்தில் ஆய்வு முடித்து கிளம்பி விட்டார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகியவை மிகப்பெரிய தொகுதிகள். ஆனாலும்கூட, ஓரிரு இடங்களில் மட்டும் ஆய்வு நடத்தி சென்றார். மாவட்ட தேர்தல் அலுவலருடன் ஆலோசனை கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படாததால், தீவிர திருத்த பணிகள் தொடர்பான நிறை குறைகளை, தேர்தல் பிரிவினரோ அல்லது தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு துறையினரோ, இயக்குனரிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ