அவிநாசி; அவிநாசி நகராட்சி கூட்டத்தில், 'சுகாதார ஆய்வாளர் என ஒருவர் இருக்கிறாரா?' என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அவிநாசி நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) அருள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம்: மோகன் (அ.தி.மு.க.): 5வது வார்டு பகுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வீடுதோறும் குப்பைகளை மட்டும் வாங்கி செல்லும் துாய்மை பணியாளர்கள், வார்டில் உள்ள வீதிகளில் தேங்கும் குப்பைகளையும், சாக்கடை கழிவுநீர் அடைப்புகளையும் சரி செய்ய வருவதில்லை. வார்டு மக்கள் ஒன்றிணைந்து, குப்பைகளை சேகரித்து துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். சுகாதார ஆய்வாளர் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. சித்ரா (அ.தி.மு.க.): கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், அவிநாசி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்களுக்கும் வராமல் பைபாஸ் ரோட்டில் செல்கிறது. போராட்டங்கள் நடத்தியும் அதேநிலை தான். கலெக்டரிடம் புகார் அளித்து, உரிய தீர்வு காண வேண்டும். ஸ்ரீதேவி (அ.தி.மு.க.): 18வது வார்டு சேலம் மெயின் ரோடு, கைகாட்டிப்புதுார், குமரன் வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் தொடர்ந்து நிரம்பி ரோட்டில் வழிந்து ஓடுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து கோவில் மற்றும் கடைகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஒரு ஆண்டாக கேட்டும் சாக்கடை கால்வாயை ஆழப்படுத்தவோ, அகலப்படுத்தவோ இல்லை. தங்கவேலு (தி.மு.க.): சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் கடைகள் அரசு புறம்போக்கு இடத்தில் தர வேண்டும். மாறாக தனியார் கடை முன் அவர் சார்ந்த தொழில் செய்வதற்கு கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது. அதேபோல ஏற்கனவே இருக்கும் கடைகளின் உரிமையாளர்களை முறையாக ஆய்வு செய்து ஒருவர் ஒரு கடைக்கு மேல் வைக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கார்த்திகேயன் (தி.மு.க.): 13வது வார்டில் காந்திஜி வீதி, ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் மாற்றி அமைக்க வேண்டும். பொதுமக்கள் பயன் படுத்தும் ரோட்டில் நடுப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி தலைவர் தனலட்சுமி பேசியதாவது: சாலையோர கடைகளுக்கான நகராட்சி நகர விற்பனை குழுவின் (வென்டிங் கமிட்டி) கூட்டம் அமைத்தது தொடர்பாக கவுன்சிலர்களின் பார்வைக்கு மன்றத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மத்திய, மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் செயல்படும் விற்பனை குழு ஆகும். இதில், வியாபாரப் பகுதி, தடை செய்யப்பட்ட வியாபார பகுதி என பிரிக்கப்பட்டு சாலையோர கடைகள் ஒதுக்கப்படும். அதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் வரும் கூட்டங்களில் அது குறித்து பேசி தீர்வு காணப்படும். வெளியே வராதசுகாதார ஆய்வாளர்கவுன்சிலர் திருமுருகநாதன் (தி.மு.க.) பேசுகையில், ''அனைத்து வார்டுகளிலும், மூன்று மாதங்களாக கொசு மருந்து அடிக்கவில்லை. பருவமழை துவங்கியுள்ளதால், மலேரியா, டெங்கு, புளூ போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுவதால் தொடர்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும். கூடுதலாக கொசு மருந்து அடிக்கும் மிஷின்கள் வாங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வருவதில்லை. எந்தெந்த பகுதி எந்தெந்த வார்டுகளுக்கு சேரும் என பணியில் இணைந்து நான்கு மாதமாகியும் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. பல வார்டுகளில் புதர்கள் மண்டி செடிகள் காடு போல முளைத்துள்ளன. புல் வெட்டும் மெஷின் புதிதாக வாங்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியும் கூட தற்போது வரை வாங்கவில்லை. துாய்மை பணியாளர்கள் காலையில் வருகை பதிவு செய்து விட்டு சென்றால், மீண்டும் மாலையில் தான் வருகின்றனர். எந்தெந்த வார்டில் 'மாஸ் கிளீனிங்' செய்தார்கள் என நேரடியாக களத்தில் சென்று சுகாதார ஆய்வாளர் பார்ப்பதில்லை,'' என்று குற்றம்சாட்டினார். உடனே எழுந்த, சுகாதார ஆய்வாளர் அரவிந்த், ''அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடித்து கொண்டு தான் உள்ளோம்,'' என்று பதில் கூறி அமர்ந்தார். கவுன்சிலர்களின் மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் கூறவில்லை.