உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாலை நேரம் தட்டியெடுத்த கனமழை

மாலை நேரம் தட்டியெடுத்த கனமழை

திருப்பூர்; திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று மாலை நேரம் தட்டியெடுத்த கனமழையால், வெயில் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை திரும்பியுள்ளது. திருப்பூர் நகர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை 7:30 முதல், மாலை, 5:00 மணி வரை வாட்டிய வெயிலை கண்டு, கோடையே மீண்டும் திரும்பியதாக மக்கள் உணர்ந்தனர். குறிப்பாக, மதிய வேளையில் வெயில் தாக்கம் மேலும் அதிகரித்து, சுட்டெரித்தது. நேற்றும், காலை, 7:00 மணி முதலே, வெயில் சுள்ளென அடிக்கத்துவங்கியது. அதேநேரம், திருப்பூர் - தாராபுரம் ரோடு பகுதியில் மட்டும், காலை 9:00 மணியளவில் லேசான துாறல் மழை பெய்து, ரோட்டை நனைத்தது. தொடர்ந்து மாலை வரை வெயில் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. மாலை, 3:30 மணியளவில், சடசடவென மழை பெய்யத்துவங்கியது. முதலில், திருப்பூர் - தாராபுரம் ரோடு சுற்றுப்பகுதிகளில் துவங்கிய மழை, படிப்படியாக நகர பகுதி முழுவதும் பெய்யத்துவங்கியது. மாலை, 5:30 மணி வரை, இரண்டு மணி நேரம் விடாமல் கன மழை பெய்தது. கோவில் வழி, பலவஞ்சிபாளையம் பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாலை நேர மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்பட பிரதான சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகள் அனைத்திலும் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியும், நீண்ட நேரம் பள்ளியில் காத்திருந்து, மழை நின்றபின் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மழை நின்றபின், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர்ந்ததாலும், ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக, திருப்பூர் நகரில் கடந்த பத்து நாட்களாக நிலவிய வெப்பமான சீதோஷ்ண நிலை மாறி, குளிர்பரவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை