நகரில் இடி, மின்னலுடன் கனமழை
உடுமலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால், ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது.தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மீண்டும், மின்னல், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ரோடுகளில் வெள்ளப்பெருக்கு
பருவ மழை காரணமாக, குளம், குட்டைகள் மற்றும் ஓடைகளில் நீர் இருப்பு உள்ள நிலையில், நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக, ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதித்தது.உடுமலையில், பல இடங்களில் வெள்ள நீர் ஓடியது. உடுமலை பார்க் ரோட்டில், நகராட்சி பூங்கா அருகில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ள நிலையில், அப்பகுதியில், வெள்ள நீர் வடிய வழியின்றி, குளம் போல் தேங்கியுள்ளது.அதே போல், பாபுகான் வீதி, வ.உ.சி., வீதி, சத்திரம் வீதி, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு உள்ளிட்ட நகரின் பிரதான ரோடுகளில், மழை நீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வெள்ள நீர் வெளியேறும் கட்டமைப்புகள் துார்வாரப்படாத நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.அதே போல், கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை என அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ள நிலையில், மழை நீர் வடிகால் கட்டப்பட்டும், ஆக்கிரமிப்பு மற்றும் பல இடங்களில் மண், கழிவுகள் தேங்கி மூடப்பட்டுள்ளதால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி வருகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள் நகரின் பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலுள்ள, மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, துார்வார வேண்டும். வால்பாறை
வால்பாறையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மேலாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்ததால், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு, காடம்பாறை, அப்பர்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின.இந்நிலையில் தென்மேற்குப்பருவ மழை விடைபெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்குப்பருவ பெய்து வருகிறது. தொடர் மழையால் வால்பாறையில் இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுகிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.51 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 309 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
மழையளவு எவ்வளவு?
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில் 42 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது.மடத்துக்குளத்தில் -- 27, திருமூர்த்தி அணை - 8, உப்பாறு அணை - 4, அமராவதி அணை - 8, வரதராஜபுரம் - 18, பெதப்பம்பட்டி - 27, பரம்பிக்குளம்-5, ஆழியாறு-34, மேல்நீராறு-37, கீழ்நிராறு-37, சர்க்கார்பதி -32, மணக்கடவு-18, துணக்கடவு-2, பெருவாரிப்பள்ளம் - 3, நவமலை -2, பொள்ளாச்சி -9 என்ற அளவில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக. பூலாங்கிணர் பகுதியில், 83 மி.மீ., பெய்தது. - நிருபர் குழு -