திருப்பூர்; கிராமப்புற பகுதிகளுக்கு, குறைந்த கட்டணத்தில், அதிவேக இணைய தள வசதி வழங்குவதற்காக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 'தமிழ்நாடு பைபர் நெட்' (டான்பி நெட்) நிறுவனம் வாயிலாக, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 260 ஊராட்சிகளுக்கு இணையதள சேவை கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'டான்பி நெட்' செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவில் பி.டி.ஓ., தலைமையில், பொறியாளர்கள் இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட 'டான்பி நெட்' பிரிவினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், மொத்தம் 265 ஊராட்சிகள் உள்ளன. அவிநாசியில் குட்டகம், மூலனுாரில் புஞ்சை தழையூர், வேலாம்பூண்டி, திருப்பூர் ஒன்றியத்தில் வள்ளிபுரம், ஊத்துக்குளியில் புதுப்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகள் தவிர, 260 ஊராட்சிகளிலும் 'டான்பி நெட்' பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சிகளில், கிராம ஊராட்சி சேவை மையங்களில், 'டான்பி நெட்' இணையதள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும், 'டான்பி நெட்' கட்டமைப்புகள் உள்ள கிராம ஊராட்சி சேவை மையங்களில், கிராமசபா நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பயன்கள் என்னென்ன? 'டான்பி நெட்', பைபர் ஆப்டிகல் கேபிள் வாயிலாக இணையதள இணைப்பு வழங்குகிறது. மாவட்டத்தில் இதுவரை சோதனையில், 100 எம்பிபிஎஸ். என்கிற இணைய தள வேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அந்தந்த ஊராட்சி அலுவலகங்களுக்கும், அடுத்து வி.ஏ.ஓ., அலுவலகம் உள்பட கிராம பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படும். கிராம வங்கிகள், நுாலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு பள்ளிகள், தனிநபர் வீடுகளுக்கு என அடுத்தடுத்த இணையதள இணைப்பு விரிவாகும். அரசு பள்ளிகளுக்கு தடையில்லாத மற்றும் அதிவேக இணையதள இணைப்பு வழங்குவதன்மூலம், ஸ்மார்ட் வகுப்பறைகளை மாணவர்கள் திறம்பட பயன்படுத்த முடியும். பைபர் ஆப்டிகல் கேபிள், இணையதள இணைப்பு, டிவி சேனல், தொலை பேசி, மூன்றுவகை இணைப்புகளையும் வழங்குவதற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது. கிராமப்புற மக்கள், ஆதார் திருத்தம், வருவாய் துறை சார்ந்த ஏராளமான அரசு சேவைகளுக்காக நகரங்களை நோக்கி வரும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், கிராமப்பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் இ-சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முனைப்பு காட்டிவருகிறது. அதிவேக இணையதள வசதி கிடைப்பதால், கிராமப்புற இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் வேகம் பெறும். இணையதள வேகம் குறைபாடு, கவரேஜ் இல்லாதது போன்ற பிரச்னைகள் நீங்கி, கிராமப்புற அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும் நிச்சயம் வேகம் பெறும்.