திருப்பூர்: குறைந்த நேரத்தில் அதிக துாரத்தை கடக்கும் வகையிலான வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும், ரயில்வே இயக்கி வருகிறது. நேரம் மிச்சமாவது ஒருபுறம் இருந்தாலும், பயணிகள் பாதுகாப்பை ரயிலுக்குள்ளேயும், ரயில்வே ஸ்டேஷன், பிளாட்பார்மிலும் உறுதி செய்வதில் ரயில்வே அக்கறை செலுத்தி வருகிறது. நேரம் மிச்சப்படுத்தும் பயணத்தை பயணிகள் பலரும் விரும்புவதால், ரயில்வேயின் பல கோட்டங்களில் அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவையில் இருந்து சேலம் வரை ரயில்கள் ஒரு வேகத்திலும், ஜோலார்பேட்டை வரை மற்றொரு வேகத்திலும், அரக்கோணம் - சென்னை இடையே கூடுதல் வேகத்திலும் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கோவை - சென்னை, ஈரோடு - சென்னை, திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் சென்னை பாதை (காட்பாடி வரை) அதிகளவில் ரயில்கள் இயங்கும் பாதைகளில் ஒன்றாக அறியப்பட்டுள்ளதால், இப்பாதையில், அதிவேக ரயில் இயக்கத்தை சோதித்து, பார்க்க தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் திட்டமிட் டுள்ளது. அதன்படி, இன்று காலை 8:00 மணிக்கு, ஐந்து அல்லது ஏழு பெட்டிகளுடன் அதிவேக ரயில் இயக்கம் கோவையில் துவங்குகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணிக்கும் ரயில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஜோலார்பேட்டை ஸ்டேஷன் சென்றடைகிறது. வழக்கமாக, கோவை - ஜோலார்பேட்டை பயண நேரம், ரயில்கள் வேகம், நின்று செல்லும் ஸ்டேஷன்கள், சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் என்பதற்கு ஏற்ப, மூன்று மணி நேரம் 45 நிமிடம் துவங்கி, ஐந்து மணி நேரம், 15 நிமிடம் வரை என வேறுபடுகிறது. இச்சூழலில் இன்று அதிவேக ரயில் இயக்கம் பரிசோதிக்கப்படுகிறது. 'வழக்கமாக, கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில், 90 - 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதிவேக ரயில் இயக்கம் கூடுதல் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதனால், ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிக்குள் யாரும் வர வேண்டாம்; ரயில் தண்ட வாளங்களை கடக்க வேண்டாம்,' என ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'மின் இணைப்பு துவங்கி, வேகமாக ரயில் இயக்கும் போது தண்டவாளத்தின் அழுத்தம், அசைவு, கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கினால் ஏற்படும் மாறுபாடு, 120 கி.மீ., வேகத்துக்கும் மேல் ரயில்களை இயக்க முடியுமா என்பன உள்ளிட்டவை குறித்து, தொழில்நுட்ப ரீதியாக அதிவேக ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் இருந்தவாறு, அலுவலர்கள் ஆய்வு செய்வர். பாதுகாப்பான பயணத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்; தண்டவாளத்தை கடக்க கூடாது,' என்றனர்.