உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மா சாகுபடியில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு  அட்வைஸ் 

மா சாகுபடியில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு  அட்வைஸ் 

உடுமலை; கிளை படர்வு மேலாண்மையை பின்பற்றினால், மா சாகுபடியில், அதிக விளைச்சல் பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.உடுமலை வட்டாரத்தில், பரவலாக 'மா' சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.அத்துறையினர் கூறியதாவது: மா சாகுபடியில், பருவமழையை பயன்படுத்தி, ஒருங்கிணைந்த களை நிர்வாகம் செய்ய வேண்டும். நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.களைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த, இடை உழவு செய்த பின், கொள்ளு, பாசிப்பயறு, தக்கைப்பூண்டு அல்லது மண் வளம் பெருக, எளிதில் மட்கும், பயறு இனவகைகளை விதைக்க வேண்டும்.நோய் தாக்கிய காய்ந்த, கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, கீழே விழுந்துள்ள இலைகளை சேகரித்து, மண் புழு உரக்குழி அல்லது மண்புழு கூடாரத்திலோ மட்க செய்ய வேண்டும். மரங்களின் வளரும் தருணத்தில், மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில், வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில், 5 கிளைகள் இருந்தால், 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம்.கவாத்து வாயிலாக மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை