அவிநாசி கோவில் தேர்த்திருவிழா முடிந்ததும் சேவூர் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நெடுஞ்சாலைத் துறையினர் பளீச்
அவிநாசி: கடந்த மாதம் அவிநாசி - சேவூர் ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவற்றின் முன்பு போடப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சரக்கு இறக்க வந்த வேனின் கதவை திடீரென டிரைவர் திறந்ததால் முதியவர் வேன் கதவில் மோதி பரிதாபமாகஉயிரிழந்தார்.சேவூர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் விபத்துகளுக்கு அச்சாரமாக அமைவதாக கண்டனங்கள் எழுந்தன. மே 2ம் தேதி மங்கலம் ரோட்டில் மசூதி பகுதியில், இருந்து சிந்தாமணி வரையிலும் கோவை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் தாலுகா அலுவலகம் முன்பாக பஸ் ஸ்டாப்பில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.முறையாக கடைகளுக்கு கடிதம் அனுப்பவில்லை என ஒரு சிலர் நெடுஞ்சாலை துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை.இதனையடுத்து, அவிநாசி நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு சென்ற தன்னார்வலர்கள், அவிநாசி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.நெடுஞ்சாலைத்துறை அவிநாசி உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் கூறுகையில், ''வருவாய்த்துறை, போலீசார், நகராட்சி ஆகிய துறையுடன் இணைந்து தேர்த்திருவிழா முடிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.