பருவமழை எதிர்கொள்ள தயாராகும் நெடுஞ்சாலைத்துறை
திருப்பூர்;பருவமழை துவங்க உள்ள நிலையில், திருப்பூர் கோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, கால்வாய் அடைப்பு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 'வரும், 16ம் தேதி வட கிழக்குப்பருவ மழை துவங்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், அவிநாசி, பல்லடம் ஆகிய, 5 சப் டிவிஷன்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சப்- டிவிஷன்களுக்கு உட்பட்ட திருப்பூர் கோட்ட கட்டுப்பாட்டில், 1,600 கி.மீ., நீள சாலை உள்ளது. இதில், மாநகராட்சி எல்லைக்குட்பட்டு மட்டும், 250 கி.மீ., துார சாலை உள்ளது. பருவமழை துவங்க உள்ளதையடுத்து, சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்காத வகையிலான பணிகளில், நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதே நேரம், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள், 250 கி.மீ., துார ரோடு செல்கிறது; மாநகராட்சி சார்பில் சாலையோரம் மழைநீர் வழிந்தோடி செல்ல பாலம், கால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது; பல இடங்களில் அவ்வாறு கட்டப்படும் கால்வாய், பாலம் ஆகியவற்றின் கட்டமைப்பு சரிவர இல்லாததால், அதுவே சாலையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நின்று, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகிறது எனவும் கூறப்படுகிறது. சாலையின் மட்டத்தில் இருந்து கால்வாய், பாலம் உள்ளிட்டவை உயர்த்தி கட்டப்படுவது தான், மழைநீர் தேங்கி, வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. -- இடுவாயில், நீர்வழித்தடம் பொக்லைன் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டது; மங்கலம் சாலையோர கால்வாய் சுத்தம் செய்யப்படுகிறது. பருவமழை துவங்கவுள்ள நிலையில், நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு, 'பொக்லைன்' உதவியுடன் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல், மழையின் போது தொடர்ச்சியாக நீர் தேங்கி நிற்கும் இடத்தில், அடைப்பு நீக்கும் பணியும் நடந்து வருகிறது. ஏறத்தாழ, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன.மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலையோரம் மற்றும் சாலையின் குறுக்கே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாலம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளும் போது, கட்டுமானத்தின் நீளம், அகலம், ஆழம் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்து, நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் பெற்றவுடன் தான் கட்டுமானப் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளோம். இரு துறையின் ஒருங்கிணைப்பு, கலந்தாலோசனையுடன் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் போது, பிரச்னை, குறைகள் எழுவது தவிர்க்கப்படும். - ரத்தினசாமி, கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை.