கபளீகரம் செய்யப்படும் கோவில்: நிலங்கள் ஹிந்து முன்னணி கவலை
திருப்பூர்: ''கோவில் நிலம் குத்தகை, வாடகை பாக்கி குறித்து கடந்த சில ஆண்டுகள் முன், கோவில் வாயிலில் பதாகைகள் வைக்கப்பட்டன. இவையெல்லாம் மூடி மறைக்கப்படுவதில் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது'' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், கங்காபேரிபுதுார் கிராமத்தில் கோவில் இடத்தில் குடியிருந்தோர் வாடகை செலுத்தாததால், அவர்களை வெளியேற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த இடத்தில், பல்லாண்டாக குடியிருந்தவர்கள் பாதிக்கப்படுவது வருத்தமான விஷயம்தான். அதே சமயம், கோவில் இடத்துக்கான வாடகை, சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது, மிக குறைவானது என்பது மறுக்க முடியாத உண்மை. கோவிலுக்காக முன்னோர் எழுதி வைத்த சொத்துக்கள், 'காலம் காலமாக கோவில் வழிபாடு சிறப்பாக நடக்க வேண்டும்; அதன் மூலம், ஹிந்து தர்மம் தழைத்தோங்கி நிலைத்து நிற்க வேண்டும்' என்பதற்காகத்தான். அறநிலையத்துறையின் கீழ், கோவில் நிர்வாகம் வந்த பின், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போயுள்ளன. திட்டமிட்ட வகையில், கோவில் நிலங்கள் மற்றும் குளங்கள், அரசுக்கு தாரைவாக்கப்பட்டு வாடகை கூட தராமல் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தவறான நிர்வாகத்தால், 17 ஆயிரம் கோவில்களுக்கு, ஏராளமாக சொத்துகள் இருந்தும், ஒரு கால வழிபாட்டுக்கு கூட வழியில்லாமல், மூடி கிடக்கும் அவலத்தை அறநிலையத்துறை வெட்கமின்றி கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. கோவில் வழிபாட்டுக்கு நிதி இல்லை என்று, ஆயிரக்கணக்கான கோவில்கள் சீரழித்து வரும் நிலையில், கோர்ட் தீர்ப்புக்கு எதிராக, கோவில் நிதியில் கல்லுாரி கட்ட, தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது எத்தனை மோசடியானது? கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வது தொடர்கிறது. அதற்கு உதாரணமாக, கரூர், தாந்தோணிமலை கோவில் நிலங்கள் பிளாட் போடப்பட்டுள்ள விபரம் வெளியே வந்துள்ளது. இத்தகைய மோசடிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம் குத்தகை, வாடகை பாக்கி குறித்து கடந்த சில ஆண்டுகள் முன், கோவில் வாயிலில் பதாகைகள் வைக்கப்பட்டன. இவையெல்லாம் மூடி மறைக்கப்படுவதில் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. கோவில் நிலங்கள், இடங்களை பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க, தமிழக அரசை ஹிந்து முன்னணி வலியுறுத்து கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.