உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூருக்கு மெத்தபெட்டமைன் பெங்களூருவில் இருந்து வந்தது எப்படி? போலீஸ் விசாரணையில் திடுக்

திருப்பூருக்கு மெத்தபெட்டமைன் பெங்களூருவில் இருந்து வந்தது எப்படி? போலீஸ் விசாரணையில் திடுக்

திருப்பூர்: திருப்பூரில் போதைக்கு பயன்படுத்தப்பட்ட மெத்த பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்து, ஆறு பேரை கைது செய்தனர். பெங்களூரில் இருந்து ஒரு கிராம், 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.திருப்பூர், பி.என்., ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிலர், போதைக்கு மெத்தபெட்டமைனை பயன்படுத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருப்பூர் வடக்கு போலீசார், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அறைகளை சோதனை செய்தனர். அதில், ஒரு அறையில் தங்கியிருந்த மதுரையை சேர்ந்த அசோக், 32, திருப்பூர் தினேஷ்குமார், 43, பல்லடம் ரங்கராஜ், 29, சகோதரர்களான வீரபாண்டியை சேர்ந்த மணிகண்டன், 22, சதீஷ்குமார், 27 மற்றும் கோவையை சேர்ந்த ரமேஷ், 46 என, ஆறு பேர், மெத்தபெட்டமைனை பயன்படுத்தியது தெரிந்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 ஊசிகள் மற்றும் மெத்த பெட்டமைன், 9.5 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.ஏற்கனவே, திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள, மூன்று தனிப்படை போலீசார் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகளின் புழக்கத்தை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மெத்தபெட்டமைன் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு பகுதியில் இதன் புழக்கம் மாநகரில் உள்ளதா, பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கிராம், 8 ஆயிரம் ரூபாய்

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருப்பூரில், 9.5 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம். இவர்களில், அசோக் என்பவர், மற்றவர்களுக்கு 'பேஸ்புக்' வாயிலாக அறிமுகமான நண்பர்கள். அசோக் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்து போதைக்கு பயன்படுத்த மெத்தபெட்டமைன் வாங்கி வந்து, நண்பர்களுடன் சேர்ந்து ஊசி செலுத்தி கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.சமீபத்தில் அங்கு சென்ற அவர், ஒரு கிராம், 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார். தொடர்ந்து, நண்பர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அனைவரும் அறை எடுத்து நண்பர்களுடன் போதை ஊசி செலுத்தியுள்ளனர். இதில், வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ