எத்தனை காலம்தான் அரசு பஸ்சுக்காக காத்திருப்பு?
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள், பின்னலாடை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பரவலாக தங்கி வேலை பார்க்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள், அவிநாசிபாளையம், கொடுவாய், தாராபுரம் வழியாக சென்று விடுகின்றன. பல்லடத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கோவையிலிருந்து வரும் அரசு பஸ்களை மட்டுமே நம்பி உள்ளோம். ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம்; பண்டிகை செலவு பஸ் கட்டணத்துக்கே சரியாகிவிடும் என்பதால், அரசு பஸ்களை நாடுகிறோம்.கோவையில் இருந்து வரும் பஸ்கள் பெரும்பாலும், பயணிகளால் நிரம்பி வழிந்தபடியே வருகின்றன. இதனால், பல்லடம் வரும்போது பஸ் ஏற முடியாத சூழல் ஏற்படுகிறது. குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வந்தால், பல்லடத்தில், பஸ்சுக்காக காத்திருந்து காத்திருந்து விடிந்து விடுகிறது. ஒவ்வொரு பண்டிகைகளின்போதும் சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்து வருகிறோம்.பண்டிகையை, குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட நினைத்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, துாக்கத்தை கெடுத்துக்கொண்டு, சொந்த ஊர் செல்லும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் அனுபவித்து வரும் இன்னல் களுக்கு தீர்வு கிடைக்க, திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க, அரசு போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.