புதுப்பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமனாருக்கு ஜாமின்
சென்னை:திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டி புதுாரை சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் என்பவருக்கும், கடந்த ஏப்., 11ல் திருமணம் நடந்தது. திருமணமான இரண்டரை மாதத்தில், ஜூன் 28ல் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, சேவூர் போலீசார் கைது செய்தனர். மூவரும் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ரிதன்யாவின் தந்தை தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடர்பாக, ஏற்கனவே கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே, மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை, மாலை சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது. விசாரணை நீதிமன்ற அனுமதியின்றி, மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், மூவருக்கும் ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.