உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாசற்ற தன்மை; என்றுமே நன்மை

மாசற்ற தன்மை; என்றுமே நன்மை

திருப்பூர்; மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி செயல்பட்ட 13 பிரின்டிங், 2 வாஷிங் நிறுவனங்கள் அதிகாரிகள் ஆய்வில் சிக்கின. அவற்றின் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டது. ''இத்தகைய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தொழில் நிறுவன அமைப்புகள் கூறுகின்றன. திருப்பூரில், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத பட்டன், ஜிப் டையிங், பிரின்டிங் நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியிலும், அடுக்குமாடி கட்டடங்களில் முதல், இரண்டாவது தளங்களிலும், ரகசியமாக வைத்து, பிரின்டிங், பட்டன் - ஜிப் டையிங், பிளிச்சீங் செய்கின்றனர். இதுபோன்ற நிறுவனங்கள் , அனுமதி பெறாமல் இயங்குவது மட்டுமின்றி, ரசாயன கழிவுநீரை, சுத்திகரிக்காமல், அருகில் செல்லும் சாக்கடை கால்வாயில் கலந்துவிடுகின்றன. முறைகேடு நிறுவனங்களிலிருந்து திறந்துவிடப்படும் சாயக்கழிவுநீர், சாக்கடை கால்வாய்கள் வழியாக, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம், நொய்யல் ஆகிய நீர் நிலைகளில் கலந்து, நீரையும், நிலத்தையும் மாசுபடுத்துகின்றன. மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், சில நாட்களாக, அனுமதி பெறாமல் இயங்கும் சாய, பிரின்டிங் நிறுவனங்கள் குறித்து தொடர் ஆய்வு நடத்தினர். தொட்டிய மண்ணரை, கஞ்சம்பாளையம், அங்கேரிபாளையம், நல்லாத்துப்பாளையம் பகுதிகளில் நடத்திய ஆய்வில், வாரிய அனுமதி பெறாமல் இயங்கிய 13 பிரின்டிங்; 2 வாஷிங் நிறுவனங்கள் சிக்கின. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில், 15 விதிமீறல் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பெ ரும்பாலான முறைகேடு நிறுவனங்கள் வாடகை கட்டடத்திலேயே இயங்குகின்றன. மின் இணைப்பு துண்டிப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இயந்திரங்கள், பட்டன்-ஜிப் டையிங்கிற்கு பயன்படுத்தும் காஸ் அடுப்பு, டிரம் ஆகியவற்றை துாக்கிக்கொண்டு, வேறு கட்டடத்துக்கு இடம்பெயர்ந்துவிடுகின்றனர். இதையடுத்து, கட்டட உரிமையாளர்கள், சுலபமாக மீண்டும் மின் இணைப்பு பெற்றுவிடுகின்றனர். இதனாலேயே, திருப்பூரில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள், எத்தனை முறை நடவடிக்கைக்கு உள்ளானாலும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களில், மீண்டும் மீண்டும் முளைத்துவிடுகின்றன. ''இயந்திரங்களை பறிமுதல் செய்தல்; கட்டட மின் இணைப்பை மட்டுமின்றி, குடிநீர் இணைப்பை துண்டித்தல், உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கினால் மட்டுமே, முறைகேடு நிறுவனங்களை அடியோடு ஒழிக்கமுடியும்'' என முறையான அனுமதி பெற்று இயங்கும் உரிமையாளர், தொழில் நிறுவன அமைப்பினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை