திறந்தவெளியில் கழிவு குவிப்பதால் பாதிப்பு
உடுமலை ; உடுமலை சுற்றுப்பகுதிகளில், இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை சுகாதார துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் கண்டுகொள்வதில்லை.மழை நீர் ஓடைகள், ரோட்டோரங்களில் குவிக்கப்படும் கழிவுகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.குறிப்பாக, கோழிக்கழிவுகளை திறந்தவெளியில் வீசுவது தொடர்கதையாக உள்ளது.உடுமலை நகர எல்லையிலுள்ள ராஜவாய்க்கால் பள்ளம், தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலை மேம்பாலம், பெதப்பம்பட்டி மற்றும் குடிமங்கலம் பகுதியில், உப்பாறு ஓடையில் இறைச்சிக்கழிவு தொடர்ந்து கொட்டுகின்றனர்.மழைக்காலங்களில், ஓடைகளில் தண்ணீர் செல்லும் போது, கழிவுகளால் தண்ணீர் மாசடைகிறது.திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளை உட்கொள்ள தெருநாய்கள் அதிகம் வருவதால், கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. பல்வேறு பிரச்னைகள் அதிகரித்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.