மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு
05-Nov-2024
உடுமலை; உடுமலை உழவர் சந்தையில், தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தினமும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 80 முதல், 110 விவசாயிகள் வரை, 30 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினமும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.இங்கு, 71 கடைகள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதல் கடைகள் அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மற்றும் கலர் ஷீட் கூரைகளை புதுப்பிக்கவும், மழை காலங்களில் கடைகளுக்குள் மழை நீர் நுழையாதவாறு, கூடுதல் பாதுகாப்புடன் மேற்கூரை அமைக்க வேண்டும்.இச்சந்தையிலுள்ள, தார் தளம் அமைத்து பல ஆண்டுகளான நிலையில், பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே, மக்கள் நடந்து செல்லும் தளம் மற்றும் கடை வளாகம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.விவசாயிகள், நுகர்வோர் என ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில், கழிப்பிட வசதிகளை அதிகரிக்க வேண்டும். தற்போது, தராசு மற்றும் உழவர் சந்தை பொருட்கள் அலுவலகத்திற்குள் வைக்கப்படுவதால், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பொருட்கள் வைக்க தனி அறை மற்றும் அலுவலக அறை அமைக்க வேண்டும். உடுமலை உழவர் சந்தையில் வசதிகளை மேம்படுத்த, நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதே போல், இச்சந்தைக்கு முன்புறம், மழை நீர் வடிகால் வசதி முறையாக அமைக்கப்படாததால், மழை நீர் மற்றும் கழிவு நீர், குளம் போல் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.எனவே, உழவர் சந்தை பகுதியில், மழை நீர் வடிகால் வசதி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இச்சந்தை கூடும் நேரங்களில், ரோட்டோரத்தில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்படுவதால்,உழவர் சந்தை விவசாயிகள் வியாபாரம் பாதிப்பதோடு, இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, இதற்கு தீர்வு காண, உழவர் சந்தை, நகராட்சி , நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
05-Nov-2024