நகராட்சியில், 70 சதவீதம் தெருவிளக்கு எரிவதில்லை; கோர்ட் சொல்லியும் கூலி உயர்வு கொடுக்கவில்லை பூண்டி கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கு பஞ்சமில்லை
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில் நேற்று கவுன்சிலர்களின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் குமார் தலைமையில், நகராட்சி ஆணையர் பால்ராஜ் (பொறுப்பு), துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடந்தது.கவுன்சிலர்கள் விவாத தொகுப்பு:லதா (அ.தி.மு.க.,): நகராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் சாக்கடை மற்றும் ரோடு போடும் பணிகளில் முழுமையாக செய்து தருவதில்லை. 20 முதல் 50 மீட்டர் துாரம் வரை பணிகளை செய்யாமல் பாதியில் நிறுத்துகின்றனர்.இதுகுறித்து கேட்டால் பொறியாளர் 'மீட்டிங்'கில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளார் என பதில் வருகிறது. நடந்த பணிகளுக்கு முறையாக தொகை கொடுப்பதில்லை.தங்கவேலு (இ.கம்யூ.,): -16வது வார்டில் போடப்பட்ட தார் சாலை 200 மீட்டர் குறைவாக உள்ளது. தார்சாலை குறைவால் அந்தப் பகுதியில் புற்கள், செடிகள் முளைத்து புதர்களாக இருப்பதால் பாதை தெரிவதில்லை. இதனால், சாலையை காணவில்லை என மக்கள் கூறுகின்றனர். உடனடியாக மீதமுள்ள 200மீட்டர் துாரத்துக்கும் தார் சாலை அமைத்து தர வேண்டும்.சுப்ரமணியம் (மா.கம்யூ.,): குப்பை எடுக்கும் ஒப்பந்ததாரருக்கு டன் ஒன்றுக்கு பத்து சதவீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கோர்ட் உத்தரவிட்டும் கூலி உயர்வு கொடுக்காமல் உள்ளது. உடனடியாக கூலி உயர்வு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.மயானத்தை சுத்தம் செய்து தர வேண்டும். 70 சதவீதம் தெரு விளக்குகள் எரிவதில்லை. 9, 10, 22, 23 வார்டு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. முறையாக சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்சாத் பேகம் (தி.மு.க.,): எனது வார்டில், மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் கான்கிரீட் சாலையை புதுப்பித்து தர இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது கான்கிரீட் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் வீட்டிற்கு முன்பு 6 அடி நீளம் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து சின்டெக்ஸ் டேங்குகள் மற்றும் படிக்கட்டுகள் வைத்துள்ளார். அதனை அகற்றாமல் இருப்பதற்காக மரம் வைத்து வளர்த்துதற்போது மரத்தை வெட்ட அனுமதி இல்லை என பிரச்னை செய்துவருகிறார்.யுவராஜ் (தி.மு.க.,): பெரியாயிபாளையம் செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பூண்டி கோவில் முன்பு உள்ள பள்ளிக்கும் சென்றுவர போதிய இடம் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் பள்ளி திறக்கப்பட உள்ளதால் உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கம் செய்து தர வேண்டும். பா.ஜ., வெளிநடப்பு
பா.ஜ., கவுன்சிலர் பார்வதி பேசுகையில், ''தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது, தேவராயம்பாளையம் பூங்கா டெண்டர் முறைகேடாக கவுன்சிலர் பெயரில் எடுக்கப்பட்டது; 8வது வார்டில் பணிபுரிந்த துாய்மை பணியாளர் இறந்து நான்கு மாதங்களாகியும் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை.எனவே, இப்பிரச்னைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறேன்,'' என்றுகூறி வெளிநடப்பு செய்தார்.பிரச்னை வழக்கமானது...துாய்மை பணியாளர் கூலி உயர்வு பிரச்னை சம்பந்தமாக உரிய துறை செயலரிடம் கலந்து ஆலோசித்து நியாயமான முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வார்டு பகுதிகளிலும் ஒரு சில பிரச்னை இருப்பது வழக்கமானது தான். அனைவரும் ஒன்று சேர்ந்து, சுமூகமாக பேசி விரைவாக வார்டு பகுதிகளில் உரிய பணிகள் நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.- குமார், நகராட்சித் தலைவர்.