உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள்.. அதிகரிப்பு: பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள்.. அதிகரிப்பு: பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி

திருப்பூர்: தீபாவளி விற்பனைக்கான பண்டிகைக்கால ஆர்டர், கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், உயர்ரக உள்ளாடைகள், நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. பிறந்த குழந்தை முதல் சிறுவர்- சிறுமியர், இளைஞர் - இளம்பெண்கள், முதியவர் வரை பயன்படுத்தும் ஆடைகள், உள்ளாடைகள் இங்கு தயாராகின்றன. வெளிமாநில மொத்த வியாபாரிகள், திருப்பூரில் ஆர்டர் கொடுத்து, ஆடைகளை வாங்கி, சில்லரை வியாபாரிகளுக்கு விற்கின்றனர்; வடமாநிலங்களில் உள்ள, உள்நாட்டு சந்தைகளில் அதிக அளவு இவை விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி திருப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி, ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்; அதில், தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர் மீதான உற்பத்தி மட்டும், 30 சதவீதம் அடங்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்தாலும், தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர்களை மையப்படுத்தியே விற்பனை அதிகம் நடக்கும். அத்துடன், பொங்கல் பண்டிகை, தசரா பண்டிகை விற்பனை, ஓணம் பண்டிகை என, உள்நாட்டு பண்டிகை ஆர்டர்களும் கிடைக்கின்றன. வழக்கமான வாடிக்கையாளருக்கு விரைந்து சப்ளை செய்ய ஏதுவாக, அனைத்து வண்ணங்களிலும், ரகம் வாரியாக உள்ளாடைகள் தயாரித்து வைக்கப்பட்டன. அவை அனைத்தும், மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. குழந்தைகள் துவங்கி, முதியவர்கள் வரை, அனைவருக்கும் 'டிரெண்டிங்' உள்ள ஆடைகள் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்தது. அவையும் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக உற்பத்தி தீவிரம் தற்போது, இரண்டாம் கட்ட ஆர்டரின் பேரில், திருப்பூரில் உற்பத்தி பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி வேகமாகி உள்ளது. தீபாவளிக்கு, இன்னும் இரண்டு வாரமே உள்ளதால், கடைசி நேர விற்பனைக்கான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை உற்பத்தி செய்து, 12ம் தேதிக்குள் கைக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, உற்பத்தியாளர் கூறுகின்றனர். கடந்த மூன்று வார கால உற்பத்தியை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டில் நடந்த உற்பத்தியை காட்டிலும் இந்தாண்டு, 15 முதல் 20 சதவீதம் வரை தீபாவளி ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளதாக, பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தாண்டு அதிகம் தீபாவளி பண்டிகைக்கு, ஆர்டர் வரும் முன்னதாகவே பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் தயார் நிலையில் இருக்கும். ஆர்டர் வந்ததும், சரக்குகளை அனுப்பி விட்டோம். மொத்த வியாபாரிகள் அவற்றை பெற்று, சில்லரை வியாபாரிகளிடம் வழங்கியிருப்பர். உள்நாட்டு சந்தைகளில் தீபாவளி விற்பனை முன்கூட்டியே துவங்கும். இரண்டாம் கட்ட ஆர்டர் மீதான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். பல்வேறு நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டை காட்டிலும் 15 முதல் 20 சதவீதம் அளவுக்கு தீபாவளி ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது. - சண்முகசுந்தரம், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்-சைமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை