காதர்பேட்டையில் ஆடைகள் வாங்கும் வடமாநில தொழிலாளர்கள் அதிகரிப்பு
திருப்பூர்: கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, காதர் பேட்டை செகண்ட்ஸ் பனியன் ஆடை விற்பனை அதிகம் நடந்துள்ளதாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் உபரியாக தேங்கும் ஆடைகள், காதர்பேட்டை பகுதியில் வியாபாரம் செய்யப்படுகிறது. ேஷாரூம்களில் உள்ள ஆடைகள் சில்லரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இருப்பினும், மொத்தமாக உற்பத்தி செய்து இருப்பு வைத்து, வெளிமாநில வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, காதர்பேட்டை மார்க்கெட்தான், வெளிமாநில வியாபாரிகளுக்கான 'திருப்பூர்' ஆக இருக்கிறது. மொத்த வியாபாரிகள், தீபாவளி, 'சாத்' பண்டிகை, துர்கா பூஜை என, பல்வேறு பண்டிகைகால விற்பனைக்கு திருப்பூரில் மொத்த கொள்முதல் செய்கின்றனர். முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து, 10 நாட்கள் இடைவெளியில் ஆடைகளை பெற்றுச்செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பு இருந்ததை காட்டிலும், வியாபாரம் அதிகரித்துள்ளதாக, காதர்பேட்டை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதாவது, வடமாநில தொழிலாளர்கள், திருப்பூரிலேயே இந்தாண்டு ஆடை வாங்கியதால், சில்லரை வியாபாரம் அதிகரித்தது; ஜவுளிக்கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். 60 சதவீதமாக உயர்வு காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்க தலைவர் நாகராஜ் கூறுகையில், ''வடமாநில தொழிலாளர், தங்கள் சம்பளத்தை, சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். திருப்பூரில் ஈட்டும் வருவாய், அப்படியே அவர்கள் மாநிலத்துக்கு செல்கிறது. கடந்த ஆண்டு முதல், முக்கிய பண்டிகைகளுக்கு திருப்பூரிலேயே குழந்தைகள் ரெடிமேடு ஆடை, பனியன் ஆடைகள் வாங்க துவங்கினர். கடந்தாண்டு, வடமாநில தொழிலாளர் வியாபாரம் 20 சதவீதம் அளவுக்கு நடந்தது; இந்தாண்டு, 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் தரமான ஆடை விலை குறைவாக கிடைப்பதால், இங்கேயே ஆடை வாங்கினர். இதன் காரணமாகவும், காதர்பேட்டைக்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. வங்கதேச ஆடைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பிறகு, திருப்பூர் பின்னலாடைக்கான வரவேற்பு, வடமாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை வியாபாரம், கடந்த ஆண்டுகளை காட்டிலும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது,'' என்றார்.