திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஏப்., முதல் டிச., மாதம் வரை, இதுவரை 790 பதின்ம வயதினர்(டீன் ஏஜ்) கர்ப்பம் தரித்துள்ளனர்; இது, முந்தைய நிதியாண்டைவிட, 14.32 சதவீதம் அதிகம்.திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 'டீன் ஏஜ்' பருவத்திலேயே, கர்ப்பமாவது அதிகரித்துவருகிறது. நடப்பு 2024 - 25ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை, 120 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளன; இவற்றில், 54 திருமணங்கள், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 137 குழந்தை திருமணம் புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், 110 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. முந்தைய நிதியாண்டில் புகார் பதிவானவற்றில், 80.29 சதவீத குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டில், 45 சதவீத திருமணங்களை மட்டுமே த டுக்க முடிந்திருக்கிறது. பெற்றோர், உறவினர் ஏற்பாட்டில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதே இதற்கு காரணம். அதிர்ச்சி தந்த புள்ளிவிவரம்
மாவட்டத்தில் கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் பதின்ம வயது சிறுமியர் கர்ப்பம் அதிகரித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில், மாவட்டத்தில் மொத்தம் 691 பதின்ம வயது கர்ப்பம் பதிவாகியிருந்தது. நடப்பு நிதியாண்டிலோ ஒன்பது மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை, 790 ஆக, 14.32 சதவீதம் அதிகரித்துள்ளது.பதின்ம வயதினர் கர்ப்பத்தில், புலம் பெயரும் தொழிலாளர் அதிகம் வசிக்கும் திருப்பூர் வட்டாரம் முன்னிலையில் உள்ளது. கடந்த நிதியாண்டில் 151 ஆக இருந்த எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில் 320 ஆக உயர்ந்துள்ளது. பல்லடத்தில், 75; உடுமலையில், 63; அவிநாசியில், 61; மடத்துக்குளத்தில், 49; தாராபுரத்தில், 48; ஊத்துக்குளியில் 34; பொங்கலுாரில் 34; காங்கயத்தில் 30; வெள்ளகோவிலில், 30; குடிமங்கலத்தில் 24; குண்டடத்தில் 13; மூலனுாரில் ஒன்பது பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.
தவறான நட்பு வட்டங்கள்
நம்பி, சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய செயல் இயக்குனர்: புலம் பெயர்ந்த தொழிலாளர் அதிகம் வசிப்பதால், திருப்பூரில், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளது. சிறுவர்கள், பாலியல் வன் கொடுமைகளில் மட்டுமின்றி, தவறான நட்பு வட்டங்களில் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர்.நமது பாடத் திட்டத்திலும், சமூகத்திலும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை. எதிர்பாலினத்தவர் மீதான ஈர்ப்புகளை எப்படி கையாளவேண்டும், உடல் சார்ந்த புரிதல்கள் ஏதுமின்றி, சிறுமியர் பதின்ம வயதிலேயே கர்ப்பமாவது வேதனை அளிக்கிறது.குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நட்பு வட்டாரம், அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, சரியான வழிகாட்டியாக செயல்படவேண்டும்.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
குழந்தை பாதுகாப்பு பிரிவை பொறுத்தவரை, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் கர்ப்பத்தை, 'டீன் ஏஜ்' கர்ப்பமாக பதிவுசெய்கிறோம். சுகாதாரத்துறையில், 19 வயது வரை கர்ப்பத்தை, 'டீன் ஏஜ்' கர்ப்பமாக பதிவு செய்கின்றனர். மாவட்டத்தில் 'டீன் ஏஜ்' கர்ப்பம் எண்ணிக்கை அதிகமாக இதுவும் ஒரு காரணம்.குழந்தை திருமணம், பதின்ம வயது கர்ப்பம் தொடர்பாக சைல்டுலைன் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். குழந்தை திருணமம் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. பெற்றோர் ஏற்பாட்டில் நடைபெறும் குழந்தை திருமணங்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்துவது சிக்கலானதாகிறது. பதின்ம வயது கர்ப்பத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் பாலின ஈர்ப்பு காரணமாக காதல் வயப்படுதலாலேயே ஏற்படுகிறது. குழந்தை திருமணங்களை குறைக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.- மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவினர்.
பிரதான காரணங்கள் என்ன?
திருப்பூர் மாவட்டம், பின்னலாடை உற்பத்தி, விசைத்தறி, கறிக்கோழி, கொப்பரை, பாத்திரம் உற்பத்தி என பல்வேறு தொழில்களின் பிரதான மையமாக உள்ளது. உள்ளூர் மக்களும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்துவரும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும் கலந்து வாழ்கின்றனர்.குடும்ப பொருளாதார முன்னேற்றத்துக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளின் மிக முக்கியமான 'டீன் ஏஜ்' பருவ நடவடிக்கைகளை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். குழந்தைகள், சிறார் மீதான பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்துவருகின்றன. அறியாதவயதிலேயே காதல் வயப்படுதல், தகாத நட்பு, ஆசை வார்த்தைக்கு மயங்கி வீட்டை விட்டு சிறுமியர் வெளியேறும்போது, அத்துமீறல்கள் நடக்கின்றன. பள்ளி பருவத்தினரிடையே அதிகரித்துவரும் மொபைல் போன் பயன்பாடு, தவறான நட்புகளுடனான தொடர்புகளை இன்னும் நெருக்கமாக்கிவிடுகிறது.சமூக நலத்துறையினரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவினரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்கூட, மாவட்டத்தில் இன்னும் குழந்தை திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குடும்ப சூழல்களை காரணம்காட்டி, பெற்றோர் சிலர், பள்ளி படிப்பு படிப்பு முடிக்கும் முன்னரே, தங்கள் குழந்தைகளுக்கு திருணம் செய்துவைக்க நினைக்கின்றனர்.