விளைச்சல் அதிகரிப்பு கீரை விலை குறைந்தது
திருப்பூர்: கடந்த ஒரு மாதமாக பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது துாறல் மழை, லேசான வெயில் என கீரை விளைச்சலுக்கு தக்க சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சபரிமலை அய்யப்பன் சீசன் துவங்கியகார்த்திகை மாதத்தில் காய்கறி, கீரை விற்பனை அதிகரிப்பால், கீரை விலை உயர்ந்தது. ஒரு கட்டு (பிடி) எட்டு முதல் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது. மருந்து குணம் நிறைந்த சுக்கட்டி (மணத்தக்காளி)கீரை, முருங்கைக்கீரை விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், மார்கழி துவக்கம் முதல் பனியின் காரணமாக, கீரை விளைச்சல் அதிகரித்துள்ளது. உழவர் சந்தை, தென்னம்பாளையத்துக்கு கீரை அதிகளவில் வந்து குவிகிறது. மல்லித்தழை விளைச்சலும் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக கீரை விலை குறைந்துள்ளது. ஒரு கட்டு (பிடி) ஐந்து முதல் ஏழு ரூபாயாகியுள்ளது. ஒரு கட்டு பத்து ரூபாய் இருந்த கீரை விலை, இரண்டு கட்டு பத்து ரூபாயாக குறைந்த போதும், வாடிக்கையாளர் வாங்குவதில்லை. இதனால், காய்கறி கடை, மளிகை கடைகளுக்கு கிலோ, 30 ரூபாய்க்கும், ஐந்து கட்டு, 20 ரூபாய்க்கும் கீரை விற்கப்படுகிறது.