எச்சரித்தும் உதாசீனம்; ஆபத்துக்கு அச்சாரம்
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டில், பாரப்பாளையம் பிரிவு முதல் நொய்யல் ஆற்றைக் கடந்து செல்லும் தீபம் பாலம் வழியாகச் செல்லும் மாநகராட்சி ரோடு உள்ளது. இதில், ஒருபுறத்தில் மங்கலம் ரோடு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் இப்பகுதி கால்வாய் வழியாகச் செல்கிறது. இதையொட்டி புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோடு செல்கிறது. இப்பகுதியில் திருநகர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இதனருகே ரோட்டோரத்தில் சிலர் குப்பை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். துணை மின் நிலையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குப்பை கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தி, விளம்பர பேனரும் வைக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான குப்பை சேர்ந்த நிலையில் துாய்மைப் பணியாளர்கள் அகற்றினர். இருப்பினும், எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சிலர் தொடர்ந்து அதே இடத்தில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுகின்றனர். இதுபோன்ற விதிமீறல் தவிர்க்கப்பட வேண்டும்.