உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயுத பூஜைக்கு தொழில் நகரம்..ஆயத்தம்! அலங்கார பொருள் விற்பனை ஜோர்

ஆயுத பூஜைக்கு தொழில் நகரம்..ஆயத்தம்! அலங்கார பொருள் விற்பனை ஜோர்

திருப்பூர்; நவராத்திரி விழா, கடந்த, 22ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது. வரும், 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 2ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில், கல்விக்கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியை வழிபடும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை நடத்தப்படும். ஆயத்த ஆடை மற்றும் அது சார்ந்த தொழில், பிற வணிகம், வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று, அனைத்து வாகனங்களையும் அலங்கரித்தும் பூஜை செய்வர். அவ்வகையில், திருப்பூர் மாநகரிலுள்ள பல ஸ்டேஷனரி கடைகளில், வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை அலங்கரிக்க வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த அலங்கார தோரணம், ஆயுத பூஜை அட்டை, ஜிகினா தாள், தோரணம் கட்ட பயன்படும் பல வண்ண காகிதங்கள், பலுான் ஆகியவற்றின் விற்பனை தீவிரமாகி உள்ளது. இதுதவிர, மின்னும் வகையிலான அலங்கார 'சீரியல் லைட்' உள்ளிட்ட பலவகை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்க, தொழில் துறையினர், வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செய்யும் தொழிலே தெய்வம்!

ஒருவர் செய்யும் தொழிலில், அவர்கள் பயன்படுத்தும் பொருளின் பயன்பாடு தான், அந்த தொழிலின் மதிப்பை தீர்மானிக்கிறது. அந்த அடிப்படையில், செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப, பயன்படுத்தும் கருவிகள், பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டினை மதிக்கும் விதமாக பூஜை செய்து வழிபடுவதே ஆயுதபூஜை பண்டிகையின் முக்கிய அம்சம். தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் உபகரணம், வாகனம் எதுவாக இருந்தாலும், அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து, வழிபாடு செய்வது, மரபு. அதன் அடையாளமாக, வீடுகளின் நிலை,கதவு மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி திருநீறு, சந்தனம், குங்குமம் வைப்பதும் வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை